×

தொடர் மழை, குளிரால் ஏ.சி., ஏர்கூலர் விற்பனை 40% சரிவு: வியாபாரிகள் தகவல்

சேலம்: தொடர் மழை, குளிர் காற்று காரணமாக தமிழகத்தில் ஏ.சி., ஏர்கூலர், சீலிங்பேன் உள்ளிட்டவைகளின் விற்பனை 40 சதவீதம் சரிந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி தொடங்கி ஜூன் மாதம் முடிய கோடை காலமாகும். இதில் ஏப், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மே மாதத்தில் உச்சக்கட்டமாக 22 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த கோடைக்காலத்தில் தமிழகம் முழுவதும் வழக்கத்தைவிட ஏ.சி., ஏர்கூலர், சீலிங்பேன் உள்ளிட்டவைகளின் விற்பனை களைகட்டும். வழக்கமாக நடக்கும் வியாபாரத்தில் இருந்து 75 சதவீதம் கூடுதலாக விற்பனை இருக்கும்.

இந்நிலையில் நடப்பாண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் மே மாதம் வரை எலக்ட்ரானிக்ஸ் கடைகள் மூடப்பட்டன. கோடை சீசன் நேரத்தில் கடைகள் மூடப்பட்டதால், சீசன் வியாபாரம் முழுவதும் வியாபாரிகளுக்கு இல்லாமல் போனது. இதனால் பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதோடு, பல்லாயிரம் கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கோடையில் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஜூன், ஜூலை மாதங்களில் ஈடுகட்டலாம் என்று எதிர்பார்த்த வியாபாரிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மக்கள் கையில் பணம் இல்லாததால் இரு மாதங்களிலும் 20 சதவீதம் வியாபாரம் கூட நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டரை மாதமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஏ.சி., ஏர்கூலர் உள்ளிட்டவைகளின் விற்பனை குறைந்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கோடையில் ஏ.சி.,ஏர்கூலர், சீலிங்பேன், டேபிள் பேன், சார்ஜர் பேன் உள்ளிட்டவைகளின் களைகட்டும்.குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் வீடுகளில் ஏ.சி., அதிகளவில் போடுவார்கள். நடப்பாண்டு கோடை வெயில் தொடங்கும் நேரத்தில் கொரோனா தொற்று பரவியதால் கடைகள் மூடப்பட்டன.கோடை சீசனில் 100 சதவீதம் வியாபாரம் இல்லாமல் போனது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையால், சீதேஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக பகலில் மிதமான குளிரும்,இரவில் அதிக குளிரும் காணப்படுகிறது. இதனால் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் ஏ.சி.,ஏர்கூலர்,சீலிங்பேன் விற்பனை 40 சதவீதம் சரிந்துள்ளது. இனிவரும் காலங்களும் குளிர்காலம் என்பதால்,மேலும் மந்த நிலை தான் ஏற்படும். தமிழகம் முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் பல கோடி மதிப்பிலான ஏ.சி., ஏர்கூலர் குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி பொருட்களை வாங்கி இருப்பு வைத்துள்ளதால் வியாபாரிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கடனை அடைக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவ்வாறு விற்பனையாளர்கள் கூறினர்.

Tags : Rain, AC, Aircooler
× RELATED உதகை அருகே உள்ள சின்கோனா கிராம...