×

10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்: நிறைவேறாத மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்ட பணிகள்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் மந்தமாக நடைபெறும் கூட்டு குடிநீர் திட்ட பணியால் மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். நாகர்கோவில் மாநகர மக்களின் தாகம் தீர்க்க 1945ம் ஆண்டு சித்திரை திருநாள் பாலராம வர்மாவால் முக்கடல் அணை கட்டப்பட்டது. அப்போதைய நாகர்கோவில் மக்கள் தொகை 40 ஆயிரம் அடிப்படையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. அணையில் இருந்து கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுத்திகரித்து விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இருமுறை முக்கடல் அணை அபிவிருத்தி திட்டம் கொண்டு வரப்பட்டு, மொத்தம் 3 வரிசையில் குழாய்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதற்கிடையே வழியோர 9 கிராமங்கள் மற்றும் கன்னியாகுமரி, சுசீந்திரம் பேரூராட்சிகளும் இந்த திட்டத்தில் இணைந்தன. குடிநீர் தட்டுபாட்டை போக்க பல்வேறு மாற்று திட்டங்கள் போடப்பட்டன.

குழித்துறை தாமிரபரணி ஆறு கூட்டு குடிநீர் திட்டம் பரிசீலிக்கப்பட்டு அதுவும் பூகோள அமைப்பு காரணமாக நிறைவேற்ற முடியாது என கைவிடப்பட்டது. இதனால் கோடையில் முக்கடல் அணையில் தண்ணீர் வற்றும் போது பேச்சிப்பாறை அல்லது பெருஞ்சாணி அணையில் இருந்து 50 கனஅடி தண்ணீர் அனந்தனாறு கால்வாயில் திறந்து விடப்பட்டு மார்த்தால் பகுதியில் இருந்து முக்கடல் அணை மற்றும் நேரடியாக கிருஷ்ணன்கோயிலுக்கு நீரேற்றம் செய்யப்பட்டது.

இதிலும் தண்ணீர் ஆவியாகி வீணாவதுடன் வழியோரம் தண்ணீர் திருட்டும் நடைபெற்றது. எனவே இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கலெக்டராக நாகராஜன் இருந்தபோது மாற்று திட்டமாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் தண்ணீர் ஒன்று சேரும் பகுதியான புத்தன் அணையில் இருந்து சாலை மார்க்கமாக குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து 2017ம் ஆண்டு டிசம்பரில் ரூ.251.3 கோடி மதிப்பீட்டில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையில் தனியார் நிறுவனம் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக புத்தன் அணையில் இருந்து கிருஷ்ணன்கோவில் வரை 31.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

இதில் 20 கிலோ மீட்டர் 900 எம்எம் விட்டம் கொண்ட பெரிய குழாயும், 11 கிலோ மீட்டர் 800 எம்எம் விட்டம் கொண்ட குழாயும்ேபாடப்படுகிறது. இதில் புத்தேரி ரயில்வே பாதை பகுதியில் மட்டுமே குழாய்கள் பதிக்கப்பட வேண்டியுள்ளது. இதுபோல் மாநகருக்குள் 420 கி,மீ தொலைவிற்கு குழாய்கள் பதிக்க வேண்டும். இதுவரை 24 கி.மீ தொலைவிற்கு இரும்பு குழாய்கள் உள்பட மொத்தம் 248 கி.மீக்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இன்னும் 172 கி.மீ தொலைவிற்கு குழாய்கள் பதிக்கப்பட வேண்டும். இதுபோல் 85 ஆயிரம் வீட்டு குடிநீர் இணைப்புகளில், இதுவரை 17060 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

திட்டமிட்டபடி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முடிவடையாததால், மாநகர மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை மழைக்காலத்திலும் கூட சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதுபோல், புத்தன் அணை முதல் நாகர்கோவில் முடிய பெரும்பாலான பகுதிகளில் பணி முடிந்தும் சாலை சீரமைக்கப்படாததால் தினசரி வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி புதைவதுடன், விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. இதே நிலை தான் நகருக்குள்ளும் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு இந்த பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Corporation , Nagercoil, drinking water project works
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு