×

உலகை உலுக்கிய கொரோனாவை போல் குழந்தைகளை தாக்கும் ‘மிஸ்-சி’ வைரஸ் நோய்

மதுரை: கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மக்களிடம் பெரும் பீதியை உண்டாக்கியுள்ள நிலையில், தற்போது சென்னை, மதுரையில் புதுவகையான ‘மிஸ்-சி’ என்ற வைரஸ் நோய் குழந்தைகளை தாக்கி வரும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா முதல் பாதிப்பு கண்டறியப்பட்டு, சுமார் 9 மாதங்கள் ஆன நிலையில், இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை. இந்நிலையில் தற்போது நாட்டில் குழந்தைகளை தாக்கும் ‘மிஸ்-சி’ என்ற புதிய வைரஸ் நோய் உண்டாக்கி மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்நோய் முதலில் குழந்தைகளைத்தான் அதிகம் தாக்கும்.

கொரோனாவின் தொடர்ச்சியாக, தற்போது பரவி வரும் இந்த ‘மிஸ்-சி’ என்னும் நோய், அமெரிக்கா, இங்கிலாந்தில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவிலும் இதன் பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரையில் ‘மிஸ்-சி’ தாக்குதலுக்கு ஆளான குழந்தைகளை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், இதுவரை 55 பேருக்கும், மதுரை அரசு மருத்துவமனையில் 12 பேருக்கும் இதற்கென சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல டாக்டர் பாலசங்கர் கூறும்போது, ‘‘இந்த ‘மிஸ்-சி’ நோய் பிறந்த குழந்தை முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள் வரை பாதிக்கிறது. கொரோனா பரவலுக்குப்பிறகு, இவ்வகை நோய் பாதிப்பு தென்படத் துவங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஜூன் மாதம்தான் ‘மிஸ்-சி’ நோய் பற்றிய அறிதல் ஏற்பட்டது. கொரோனா பாதித்து சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, இந்நோய் பாதிப்பு நேரலாம் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த பாதிப்புடைய குழந்தைகளுக்கு 24 மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல் நீடிக்கும். கண்கள், உள்ளங்கை, பாதம், நாக்கு, வாய்ப்பகுதிகள் சிவக்கும். உதட்டில் வெடிப்பு ஏற்படும். தோல் பகுதியில் சிவப்புநிறத்தில் திட்டுகள் தெரியும். வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு அறிகுறிகள் இருக்கும். பொதுவாக குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்தாலே மிகுந்த எச்சரிக்கையோடு சிகிச்சை வழங்குவது அவசியம். குறிப்பாக, கொரோனா நோய் பாதித்த குழந்தைகளுக்கு, இவை தென்பட்டால் சிறிதும் அலட்சியப்படுத்த கூடாது.

கல்லீரல், சிறுநீரகம், மூளை என உடலில் பல உறுப்புகளை சேதப்படுத்தியும், ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தியும் இந்த வைரஸ் மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தானது. மதுரை, சென்னை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்நோய் பாதிப்பை குணப்படுத்தும் மருந்துகள் உள்ளன. இந்நோய்க்கு ஆளானவர்கள் ஒரு வாரம் முதல் 10 நாட்களாவது சிகிச்சை பெற வேண்டும்’’ என்றார்.

எப்படி கண்டறிவது?

‘மிஸ்-சி’ நோய் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து சிஆர்பி, இஎஸ்ஆர் என்னும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. கிருமி உடலில் இருந்தால், ஏற்படும் மாற்றங்களை கண்டறிய இந்த பரிசோதனை உதவுகிறது. அதேபோல், கிருமிகள் வந்தால், சி-ரியாக்டிவ் புரோட்டின் அளவு அதிகரிக்கும். ‘மல்டி சிஸ்டம் இன்பிளமேட்டரி சின்ரோம் இன் சில்ட்ரன்’ என்ற குழந்தைகளுக்கான ‘அழற்சி நோய்க்குறி’ என்பதன் அர்த்தமே, சுருக்கமாக ‘‘மிஸ்-சி’’ எனப்படுகிறது.

Tags : Miss ,children ,world , Corona, child, Miss-C
× RELATED விழுப்புரத்தில் அழகிப்போட்டி; மிஸ்...