×

நெல்மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்

மன்னார்குடி: நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டை நெல்கொள்முதல் செய்யக்கோரி நெல்மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் வடுவூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான வடபாதி, தென்பாதி, மேல்பாதி, அக்ரகாரம், புதுக்கோட்டை, உத்தங்குடி, சாத்தனூர், கொண்டையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குறுவை சாகுபடி நெல் அறுவடை முடிந்த நிலையில் விவசாயிகள் நெல்மூட்டைகளை வடுவூர் அடிச்சேரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். இந்த கொள்முதல் நிலையத்தில் கடந்த 1 மாதமாக 10 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது. சாக்கு இல்லை, பணம் இல்லை, ஆட்கள் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களை சொல்லி அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்துவதாக விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும், விவசாயிகளுக்கு 24 மணி நேரத்திற்குள் நெல்லுக்குரிய தொகை வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்திருந்தது. ஆனால், நடைமுறையில் அரசின் உத்தரவை மீறும் அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி வடுவூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் நாளொன்றுக்கு 600 மூட்டைகள் மட்டுமே நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி கிடைக்கிறது.

இந்நிலையில், வடுவூர் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நாளொன்றுக்கு 1500 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு பேரவை தலைவர் சுவாமிநாதன், பொதுச்செயலாளர் அசோக்குமார் ஆகியோர் தலைமையிலான விவசாயிகள் நேற்று நெல் மணிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வடுவூர் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிரச்னை குறித்து உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று இரண்டு தினங்களுக்குள் கொள்முதலை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால் மன்னார்குடி- தஞ்சை நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road , Paddy, road, farmers, stir, struggle
× RELATED நெல்லுக்கு மாற்றாக சிறுதானிய பயிர்களை பயிரிடும் விவசாயிகள்