×

கோவை முத்தண்ணன் குளக்கரையில் கோயில் இடிக்க எதிர்ப்பு; பொதுமக்கள் தர்ணா

கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரையில் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனிடையே அக்குளக்கரையில் வசிக்கும் மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், காபி கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழக்கப்பட்டுள்ளன.

இதில் சில மாதங்களுக்கு முன்பு சுமார் 1600 பேர் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்றுவிட்டனர். அவர்களது வீடுகள் முதல் கட்டமாக இடிக்கப்பட்டன. அதன்பின் தற்போது அங்கு காலியாக உள்ள 400 மேற்பட்ட வீடுகளை ஜே.சி.பி. உதவியுடன் இடிக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அப்பகுதியில் சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை இடிக்க உள்ளதாக தகவல் பரவியது.

இதையடுத்து கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து முத்தண்ணன் குளம் சுண்டப்பாளையம் சாலை சிவராம் நகரில் பொதுமக்கள் கோயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கலைந்து சென்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘முத்தண்ணன் குளக்கரை பகுதியில் 3 கோயில்கள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக இந்த கோயில்கள் இடிக்கப்பட உள்ளன’’ என்றார்.

Tags : demolition ,Coimbatore Public Darna , Muthannan, kulakarai, Temple
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...