×

கயத்தாறு அருகே ஆடு மேய்ந்த தகராறில் பட்டியலின தொழிலாளியை காலில் விழச் செய்து மிரட்டல்: வைரலாகும் வீடியோ காட்சிகளால் பரபரப்பு

கயத்தாறு: தூத்துக்குடி  மாவட்டம் கயத்தாறு அருகே ஓலைகுளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்(55). பட்டியல் இனத்தை சேர்ந்த இவர், ஆடு மேய்க்கும் தொழிலாளி. இதே ஊர் தெற்குத் தெருவை சேர்ந்தவர் சிவசங்கு(60). இவரும் ஆடுகள் வளர்த்து மேய்த்து வருகிறார். இந்நிலையில் சிவசங்கு காலில் விழுந்து பால்ராஜ் மன்னிப்பு கேட்பது போன்றும், அவருக்கு சிவசங்கு தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்து துரத்துவது போன்றும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமாரிடம் பால்ராஜ் புகார் அளித்தார். அதன்படி கயத்தாறு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் தெரியவந்ததாவது: பால்ராஜ், சிவசங்கு இருவரும் சில மாதங்களுக்கு முன் ஒரே இடத்தில் ஆடு மேய்த்ததில் வாய் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது.

கடந்த 8ம் தேதி பால்ராஜ் வளர்க்கும் ஆடுகள், சிவசங்குவின் தோட்ட பகுதிக்குள் சென்றதால் ஆத்திரமடைந்த சிவசங்கு மற்றும் அவரது உறவினர்கள், பால்ராஜை அழைத்து மிரட்டி அவரது காலில் 3 முறை விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து விரட்டியுள்ளனர். இதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது. ஓலைகுளம் சிவசங்கு(60), மகன், மகள் உட்பட 7 பேர் மீது கயத்தாறு போலீசார், கொலை மிரட்டல் விடுத்தல், சாதி பெயரை சொல்லி திட்டுதல், காலில் விழவைத்து வன்கொடுமை செய்தல், வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விடுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 7 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.


Tags : List worker ,sheep herding dispute ,Kayathar , List worker threatened with falling on goat herding dispute near Kayathar: Violent video footage
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...