×

காயத்தால் விலகினார் இஷாந்த்: டெல்லிக்கு பின்னடைவு

துபாய்: டெல்லி கேப்பிடல்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா, இடது விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். டெல்லி அணி இதுவரை விளையாடி உள்ள 7 லீக் ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே இஷாந்த் (32 வயது) விளையாடி இருந்தார். அபுதாபியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த அப்போட்டியில் அவர் 4 ஓவரில் 26 ரன் விட்டுக் கொடுத்தார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இந்நிலையில், கடந்த 7ம் தேதி வலைப்பயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு இடது விலா பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டு அவதிப்பட்டார்.

ஸ்கேன் பரிசோதனையில் தசை கிழிந்திருப்பது தெரியவந்தது. இந்த காயம் முழுமையாக குணமாவதற்கு மேலும் சில வாரங்களாகும் என்பதால், எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியில் ஏற்கனவே சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஷ்ரா விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக விலகிய நிலையில், தற்போது இஷாந்த் விலகி உள்ளது நெருக்கடியை அதிகரித்துள்ளது. எனவே, இஷாந்த்துக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்க டெல்லி அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. வலைப்பயிற்சிக்கான நெட் பவுலராக உள்ள பிரதீப் சங்வான் அணியில் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.


Tags : Ishant ,Delhi , Ishant withdraws due to injury: A setback for Delhi
× RELATED உடற்தகுதியை நிரூபிக்க பயிற்சி... இஷாந்த் சர்மா கடும் முயற்சி