ரிஷப் பன்ட்டுக்கு ஒரு வாரம் ஓய்வு... ஷ்ரேயாஸ் தகவல்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் தசைநார் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். கடந்த வெள்ளியன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் அவர் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக அலெக்ஸ் கேரி விளையாடினார். அந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 163 ரன் என்ற இலக்கை துரத்திய மும்பை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து வென்றது. டி காக், சூரியகுமார் தலா 53 ரன் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தனர். இஷான் 28 ரன் அடித்தார். டி காக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மும்பை, டெல்லி இரு அணிகளும் 7 போட்டியில் 5 வெற்றிகள் பெற்று தலா 10 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கின்றன.

எனினும், ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணி முதலிடத்தை பிடித்துள்ளது. பன்ட்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது: அடுத்த போட்டிகளில் ரிஷப் பன்ட் விளையாடுவது குறித்து எந்த ஐடியாவும் இல்லை. அவர் ஒரு வார காலம் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர் கூறியுள்ளார். பன்ட் விரைவில் குணமடைந்து முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராகிவிடுவார் என நம்புகிறேன். மும்பைக்கு எதிராக 10-15 ரன் குறைவாக எடுத்துவிட்டோம். 170-175 ரன் எடுத்திருந்தால் போட்டியின் முடிவு வேறாக இருந்திருக்கும். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்டாய்னிஸ் ஆட்டமிழந்தது ரன் வேகத்துக்கு தடை போட்டது. பீல்டிங்கிலும் சொதப்பினோம். சில கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டதும் தோல்விக்கு காரணமாகிவிட்டது. மொத்தத்தில், அனைத்து வகையிலும் எங்களை விட மும்பை சிறப்பாக விளையாடியது. தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்போம். இவ்வாறு ஷ்ரேயாஸ் கூறியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் தனது 8வது லீக் ஆட்டத்தில் நாளை மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Related Stories: