×

ஹத்ராஸ் இளம் பெண் பலாத்கார கொலை வழக்கு இணையதளத்தில் எப்ஐஆரை சிபிஐ நீக்கியது

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை இணைய தளத்திலிருந்து சிபிஐ நீக்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் செப்டம்பர் 14ம் தேதி 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பேராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த வழக்கை முதலில் மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்த நிலையில் பின்னர் சிபிஐ விசாரணைக்கு உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

அதன்படி, விசாரணையை தொடங்கிய சிபிஐ நேற்று முன்தினம் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அதில் கொலை மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது கொலை முயற்சி, கூட்டு பலாத்காரம், கொலை, வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. அதில், சந்தேகத்திற்குரிய குற்றங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முதல் தகவல் அறிக்கை சிபிஐ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பின்னர் இந்த எப்ஐஆர் பதிவு சிபிஐ இணைய தளத்திலிருந்து சிறிது நேரத்தில் நீக்கம் செய்யப்பட்டது. இது குறித்து சிபிஐ தரப்பிலிருந்து பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் சந்த்ப்பா போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ கையிலெடுத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

* குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜர்
ஹத்ராஸ் சம்பவத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. அக்டோபர் முதல் தேதி நடந்த விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், திங்கட்கிழமையன்று அவர்களை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனால் இளம்பெண்ணின் குடும்பத்துக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்ததுடன் அவரது வீட்டைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி நேற்று காலை பலத்த பாதுகாப்புடன் இளம்பெண்ணின் தாய், தந்தை மற்றும் பெண்ணின் மூன்று சகோதரர்கள் லக்னோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மதியம் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தியது உபி காவல்துறை. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Tags : CBI ,murder ,Hathras ,rape , The CBI has dropped the FIR on the website of the Hadras young girl rape and murder case website
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...