×

தனியார் கல்லூரிகளிலும் ஒரே ஷிப்ட் கோரும் வழக்கு பதில் தராவிட்டால் துறை செயலாளர் ஆஜராக உத்தரவிட நேரிடும்: அரசுக்கு ஐகோர்ட் இறுதி கெடு

சென்னை: அரசு கல்லூரிகளில் கொண்டு வரப்பட உள்ள ஒரே ஷிப்ட் நடைமுறையை தனியார் கல்லூரிகளுக்கும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு டிசம்பர் 8ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்யாவிட்டால் உயர் கல்வித்துறை செயலாளரை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் 2006ம் ஆண்டு கல்லூரிகளின் பாட வேளை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி காலை, மாலை என இரு ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டது. காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒரு ஷிப்ட், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஒரு ஷிப்ட் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், 2020-21ம் கல்வியாண்டு முதல் பழைய முறைப்படி, காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை வகுப்புகள் நடத்த அனுமதியளித்து கடந்த ஜூலை மாதம் தமிழக உயர் கல்வித் துறை செயலாளர் அரசாணை பிறப்பித்தார். இந்த அரசாணையை, தமிழகம் முழுவதும் உள்ள 1,249 அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுய நிதி கல்லூரிகளிலும் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தற்போது 50 அரசு கல்லூரிகளில் மட்டும் சோதனை அடிப்படையில் ஒரே ஷிப்ட் முறை அமல்படுத்த உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் இத்திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த மனுவுக்கு பதில் தர அவகாசம் வேண்டும் என்றார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், கடைசி வாய்ப்பாக டிசம்பர் 8ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் உயர் கல்வி துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

Tags : colleges ,department secretary ,state ,ICC , If the case demanding the same shift in private colleges is not answered, the department secretary will have to issue an order: Icord deadline for the government
× RELATED குரும்பலூர்,வேப்பந்தட்டை, வேப்பூர்...