×

பாலியல் ரீதியாக உயரதிகாரி தொந்தரவு: ஈரோடு எஸ்பியிடம் பெண் எஸ்ஐக்கள் புகார்

ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் துறையில், தொழில்நுட்ப பிரிவு (டெக்னிக்கல்) ஒன்று இயங்கி வருகிறது. இதன் முக்கிய பணியே வாக்கிடாக்கியை பராமரிப்பதும், ஆன்லைன் எப்.ஐ.ஆர். (சிசிடிஎன்எஸ்) போன்ற பணிகளை மேற்கொள்வதுமே ஆகும். அந்த வகையில், ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள தொழில்நுட்ப பிரிவில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில், உயர் அதிகாரி ஒருவர், சில மாதங்களாக தனக்கு கீழ் பணியாற்றும் பெண் எஸ்.ஐ.க்களிடம் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியும், சில்மிஷத்திலும் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்.ஐ.க்கள் வாய்மொழியாக ஈரோடு எஸ்.பி. தங்கதுரையிடம் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்கொடுமை பாதுகாப்பு பிரிவு ஏடிஎஸ்பி கனகேஸ்வரி தலைமையில் கமிட்டி அமைத்து, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து எஸ்.பி. தங்கதுரை கூறுகையில், தொழில்நுட்ப பிரிவு உயரதிகாரி, பெண் எஸ்.ஐ.க்களிடம் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக வாய்மொழியாகத்தான் புகார் வந்தது. இதுதொடர்பாக விசாரிக்க ஏடிஎஸ்பி கனகேஸ்வரி, அலுவலக கண்காணிப்பாளர், பெண் இன்ஸ்பெக்டர், என்ஜிஓ (தன்னார்வலர்) பெண் ஒருவர் என 4 பேர் கொண்ட தனி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியினரின் அறிக்கையின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Sexual harassment ,SP , Sexual harassment of a high-ranking official: Female SIs complain to Erode SP
× RELATED ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை