×

மத்திய அமைச்சர் பதவி கேட்டு வைத்திலிங்கம் போர்க்கொடி டெல்டா மாவட்ட நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு

தஞ்சை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளது. ஆனால், ஆளுங்கட்சியான அதிமுகவில் இப்போதே முதல்வர் வேட்பாளர், தேர்தலில் சீட்பெறுவது என பல்வேறு போட்டிகள் தலை தூக்கி உள்ளன. கடந்த 28ம் தேதி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிப்பதில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் எழுந்தது. முடிவில், கடந்த 7ம் தேதி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதனால், எடப்பாடி-ஓபிஎஸ் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்தது.

இந்தநிலையில், மத்திய அமைச்சரவையில் இடம் பிடிப்பது குறித்து போட்டி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற பிரதமர் மோடி புதிய அமைச்சரவையுடன் தனது 2வது ஆட்சிப் பதவியைத் தொடங்கினார். 24 கேபினட் அமைச்சர்கள், ஒன்பது இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு), 24 இணை அமைச்சர்கள் உட்பட 57 அமைச்சர்களுடன் மோடி பதவியேற்றார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், சிவசேனா (அரவிந்த் சாவந்த்), சிரோன்மணி அகாலிதளம் (ஹர்சிம்ரத் கவுர் பாதல்), லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பஸ்வான்), இந்திய குடியரசு கட்சி (ராம்தாஸ் அதவாலே) ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.

இவற்றில், கடந்த 2019ம் ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, பா.ஜ.க.-சிவசேனா இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய அரசில் அங்கம் வகித்த சிவசேனா விலகியது. அடுத்ததாக, வேளாண் சட்டங்களை முன்னிறுத்தி சிரோன்மணி அகாலிதளமும் சமீபத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனால், மேற்கண்ட இரு கட்சிகளின் அமைச்சர்களும் பதவி விலகினர். இதைத்தொடர்ந்து, ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனாவாலும், லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் இருந்த ராம்விலாஸ் பஸ்வான் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தனர்.

இதனால், 2 அமைச்சர்கள் மறைவும், 2 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் 4 மத்திய அமைச்சர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் எனக்கூறப்படுகிறது. இந்த பதவியை பிடிக்க வைத்திலிங்கம் எம்.பி. முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகளை தனது பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் கூறியதாவது:
அதிமுகவில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் டெல்லியில் அதிமுக சார்பில் தனது குரல்தான் ஒலிக்க வேண்டும் என்று வைத்திலிங்கம் கணக்கு போடுகிறார். எந்த விஷயமாக இருந்தாலும் தன் மூலம்தான் பேச வேண்டும் என்று நினைக்கிறார். ஜெயலலிதா அமைத்த ஐவர் குழுவில் அப்போதைய அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஜெயலலிதா இருக்கும்போது முக்கிய நபராகவும், மூத்த தலைவராகவும் வலம் வந்தார். தற்போது, மாநிலங்களவை எம்.பி.யாக வைத்திலிங்கம் உள்ளார். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ளதால், அதிமுகவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது.

இதனால், ஓ.பி.எஸ். தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க தீவிரமாக செயல்பட்டார். இதற்காக அவர் டெல்லி சென்று பாஜக தலைவர்களையும் சந்தித்து பேசினார்.மேலும் தன் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி தரவேண்டும் என்று எடப்பாடியிடம் ஓ.பி.எஸ். பேசி உள்ளார். இதற்கு எடப்பாடியும் பச்சை சிக்னல் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த வைத்திலிங்கம், சொந்த ஊருக்கு வந்து ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். காவிரி டெல்டா மாவட்டத்தில் தனது பலத்தை நிரூபிக்க நினைக்கிறார். குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் இவருக்கு செல்வாக்கு அதிகம்.அதனால், ஆலோசனைநடத்தி வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையில் ஓபிஎஸ் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி வாங்க தீவிரம் காட்டி வருகிறார். இதேபோல்  கே.பி.முனுசாமியும் அமைச்சர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வருகிறார். இருப்பினும் டெல்டா மாவட்டத்தில கட்சியில் 50% ஆதரவு வைத்திலிங்கத்துக்கு உள்ளதால் வரும் தேர்தலில் கட்சிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படக்கூடாது என்பதால் வைத்திலிங்கத்தை சமாதானப்படுத்த அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என கூறப்படுகிறது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சர் பதவி கேட்டு வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அதிமுகவில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் டெல்லியில் அதிமுக சார்பில் தனது குரல்தான் ஒலிக்க வேண்டும் என்று வைத்திலிங்கம் கணக்கு போடுகிறார். எந்த விஷயமாக இருந்தாலும் தன் மூலம்தான் பேசவேண்டும் என்று நினைக்கிறார்.

Tags : consultation ,battle flag delta district executives ,Vaithilingam ,Union ,AIADMK , Secret consultation with Vaithilingam battle flag Delta district executives seeking Union ministerial post: AIADMK stirs again
× RELATED இதுவரை 440 எம்எல்ஏக்களை விலை கொடுத்து...