×

வடகிழக்குப் பருவமழையின் போது புயல், கனமழையிலிருந்து மக்களை மீட்க அரசு தயார்: ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு

சென்னை: வடகிழக்குப் பருவமழையின்போது புயல், கனமழையிலிருந்து மக்களை மீட்க அரசு தயாராக இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்  திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கே.பி.அன்பழகன், இரா.துரைக்கண்ணு, ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசியதாவது:
தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களைத் தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை நன்றாகப் பொழிந்து நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் சுமார் 24 சதவிகிதம் கூடுதலாக மழைப் பொழிவு இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.  தற்பொழுது வடகிழக்குப் பருவ மழை துவங்கவுள்ளதால், அதனை எதிர்கொள்வது குறித்தும், மேலும், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை காரணமாக எந்தெந்தப் பகுதிகளில் புயல், கனமழை ஏற்பட்டதென்றும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தடுத்து மக்களையும், விவசாயப் பெருமக்களையும் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் வருவாய்த் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வடகிழக்குப் பருவ மழையின்போது அரசு இயந்திரம் எப்படி செயல்பட வேண்டுமென்றும் தெரியப்படுத்தியுள்ளனர். பருவ மழை காலங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை, மின்சாரத் துறை, சுகாதாரத் துறை போன்ற அத்தியாவசியத் துறைகளின் மூலமாக, வடகிழக்கு பருவமழை பெய்கின்ற காலங்களில், மக்கள் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அரசு தயார் நிலையில் உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை தங்கவைப்பதற்கும், புயல் வீசுகின்றபொழுது சாலை ஓரங்களிலுள்ள மரங்கள் சாய்ந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. பருவமழையினால் ஏற்படுகின்ற பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்பதற்கு படகுகள், அதேபோல, தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாநிலப் பேரிடர் மீட்புக்குழு போன்றவை தயார் நிலையில் வைப்பதற்குண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

அதேபோல, அக்காலக்கட்டத்தில், அத்தியாவசியப் பொருட்களை இருப்பில் வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு சுகாதாரத் துறை மூலமாக தேவையான மருந்துகள், மருத்துவ வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, வடகிழக்குப் பருவமழையின்போது பெய்கின்ற மழைநீர் உபரியாக வெளியே செல்கின்ற கால்வாய்கள் சீர் செய்யப்பட்டிருக்கின்றன, வெள்ளத்தடுப்பு  கால்வாய்கள் அமைக்கப்பட்டு சீர் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் பெய்கின்ற மழைநீர் தேங்காமல், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் மழைநீர் வெளியேறுகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல், மீனவர்கள் கடலுக்குள் செல்கின்றபொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தகவல் தொலைதொடர்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு புயல் காலங்களில் முன்னெச்சரிக்கையாக தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. வடகிழக்குப் பருவமழையின்போது புயல் வீசினாலும், கனமழை பெய்தாலும் அதிலிருந்து மக்களை மீட்பதற்கு அரசு அனைத்து வகைகளிலும் தயாராக இருக்கிறது. வடகிழக்கு பருவமழையால் எவ்விதத்திலும் மக்கள் பாதிக்காத அளவிற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் பேசினார். பருவமழையினால் ஏற்படுகின்ற பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்பதற்கு படகுகள், தேசிய பேரிடர் மீட்புக்குழு,
மாநிலப் பேரிடர் மீட்புக்குழு போன்றவற்றை தயார் நிலையில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

Tags : Government ,storms ,northeast monsoon ,Edappadi ,meeting , Government ready to rescue people from storms and heavy rains during northeast monsoon: Chief Minister Edappadi speaks at consultation meeting
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...