×

ஐகோர்ட் விஜிலென்ஸ் பதிவாளர் பூர்ணிமாவை பதவி நீக்கம் செய்யகோரிய வக்கீலுக்கு ரூ.5 லட்சம் அபராதம்: வழக்காடவும் தடை; சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளர் பூர்ணிமாவை பதவி நீக்கம் செய்ய கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் சதிஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு நீதித்துறை பணியில் 2011ம் ஆண்டு மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் சேர்ந்த பூர்ணிமா தற்போது சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளராக இருந்து வருகிறார். இவர் சட்டக்கல்லூரிக்கு செல்லாமல் நேரடியாக தேர்வை மட்டும் எழுதி சட்டப்படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். வக்கீலாக பூர்ணிமா பதிவு செய்யும்போது தமிழ்நாடு பார் கவுன்சில் இதனை ஆராய தவறி விட்டது.

தற்போது சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளராக பதவி வகிக்கும் பூர்ணிமா, பள்ளிப்படிப்பை ரெகுலர் முறையில் முடித்ததற்கான ஆவணங்கள் இல்லை. எனவே, அவரைஅப்பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 10ம் வகுப்பு படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், பின்னர் மைசூருவில் சட்டப்படிப்பும் முடித்து பூர்ணிமா நீதித்துறை பணியில் சேர்ந்துள்ளார். தமிழக அரசாணையின்படி அவர் பதவியில் நீடிக்க தகுதியில்லை என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, தலைமை நீதிபதி சாஹி, பதிவுத்துறையிலிருந்து பெற்றப்பட்ட சான்றிதழ்களை சுட்டிக்காட்டி விஜிலென்ஸ் பதிவாளர் பூர்ணிமா, 1984ல் 12ம் வகுப்பை 711 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிவித்து அந்த சான்றிதழை காணொலியில் காட்டினார். மேலும், இந்த வழக்கு மூலமாக நீதித்துறைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக மனுதாரரான வக்கீல் சதீஷ்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். அற்ப காரணங்களுக்காக வழக்குகள் தொடர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த அபராதத் தொகையை மாவட்ட கலெக்டர் வசூலிக்க வேண்டும். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுகிறது. மனுதாரர் சதீஷ்குமார் மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 20ம் தேதி விசாரிக்கப்படவுள்ளது. எனவே, அன்று சதீஷ்குமார் நேரில் ஆஜராக வேண்டும். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடியும் வரை எந்த நீதிமன்றத்திலும் அவர் வக்கீலாக ஆஜராகக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

Tags : Lawyer ,Registrar ,Purnima Chennai iCourt , Lawyer fined Rs 5 lakh for dismissal of ICC Vigilance Registrar Purnima Chennai iCourt order
× RELATED பாரதியார் பல்கலையில் முன்னாள் மாணவர் சந்திப்பு