×

புதுக்கோட்டை குறிச்சிப்பட்டியில் முப்படைகளையும் காகிதங்களில் செய்து அசத்தும் கிராமத்து இளைஞர்

திருமயம்: காகிதம், சார்ட் அட்டை போன்றவற்றில் படம் வரைந்து பார்த்திருப்போம், மழை பெய்யும் போது விளையாடுவதற்காக கப்பல் செய்து பார்த்திருப்போம், ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் குறிச்சிப்பட்டி கிராமத்தில் ஒருவர் சார்ட் அட்டை மூலம் அழகழகாக முப்படைகளையும் செய்கிறார் என்ற தகவலறிந்து அந்த கிராமத்திற்கு சென்றோம். “கப்பல் செய்ற மாமா வீடா? அது எங்க ஆனந்தராஜ் மாமா தான் வாங்க நாங்க கூட்டிட்டு போறோம், என்று அன்போடு அழைத்துச் சென்றனர் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள்.

அரைகுறையாக கட்டப்பட்ட வீடு, விவசாயம் பொய்த்து விட்ட நிலையில் வருமானத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்ற ஏக்கத்துடன் இருக்கும் பெற்றோர்கள், எதுவாக இருந்தாலும் சமாளித்து விடலாம் என்ற தைரியத்துடன், முகமலர்ச்சியுடன் நம்மை வரவேற்றார் ஆனந்தராஜ்(27).

அவரது திறமை குறித்து கேட்டபோது, சொன்னால் உங்களுக்கு புரியாது அதை பார்த்தால்தான் தெரியும் என அவர் செய்து வைத்து இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து காண்பித்தார். அப்படியே அச்சு அசலாக, தத்ரூபமாக முப்படைகளையும் சார்ட் அட்டை மூலம் தயாரித்திருந்தார். அதுமட்டுமின்றி தத்துரூபமாக வீடு, ஜேசிபி, கார், லாரி என அனைத்தையும் அருமையாக செய்திருந்தார். அதைப் பார்க்கையில் ஏதோ காஸ்ட்லியான மெட்டீரியல் வைத்து செய்திருப்பார் போல என தோன்றியது ஆனால் முழுக்க முழுக்க பேப்பர் மற்றும் அட்டை மூலம் தயாரித்து இருப்பதை கண்டு நெகிழ்ச்சியாக இருந்தது.

இதுகுறித்து ஆனந்தராஜ்யிடம் கேட்ட போது, இதே ஊரில்தான் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தேன் பின் புதுக்கோட்டையில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தேன். எனக்கு சிறுவயதிலிருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் ஒரே மகன் என்பதால் வீட்டில் அனுப்ப மறுத்து விட்டனர். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இருப்பினும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே பேப்பர் மூலம் இது போன்ற பொருட்களை செய்ய தொடங்கினேன். நாளடைவில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் கடற்படை, விமானப்படை, போர் படை என அனைத்து வாகனங்கள் மற்றும் அங்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் சாட்டை மூலம் இந்திய தொடங்கினேன். பிடித்த வேலைகள் செய்வதில் இருக்கும் மகிழ்ச்சி வேறெதுவும் கிடையாது. இந்த கலை சார்ந்த படிப்பை தேடினேன். அப்போது புதுக்கோட்டையில் ஆட்டோ கேட் (auto cadd) மூலம் இன்னும் என் திறமையையும் வளர்த்துக் கொண்டேன்.

இன்ஜினியரிங் முடித்த பிறகு ஒரு வருடம் சென்னையில் பணி புரிந்தேன். ஆனால் எனக்கு திருப்தி அளிக்கவில்லை அதன் பின் இங்கு வந்து கல்லூரியில் படிப்பவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் பணிகளுக்கு இது போன்ற பொருட்களை செய்து கொடுத்தேன். கொஞ்சம் வருமானம் கிடைத்தது. இந்த கொரோனா ஊரடங்கு பின் அதுவுமில்லாமல் வருமானமின்றி போனது. விவசாயம் தான் என் பெற்றவர்களின் தொழில், அதனையும் தற்போது கவனித்துக்கொள்கிறேன். மழை இல்லாததால் விவசாயமும் பொய்த்து விட்டது. அதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது ஊரில் உள்ள குழந்தைகளுக்கு இதனை இலவசமாகவே கற்றுக் கொடுக்கிறேன். ஒரு பொருள் தயாரிக்க 500 ரூபாய் வரை செலவாகும். இதை எப்படி செய்வது என சமூக வலைதளங்களிலும் பதிவிடுகிறேன். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏதேனும் ஒரு பள்ளியில் இதனைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகவோ அல்லது ராணுவத்திற்கு தயாரிக்கும் பொருட்களை டிசைனிங் செய்யும் பணி கிடைத்தால் நன்றாக இருக்கும் என முயற்சித்து கொண்டிருக்கிறேன். மேலும் செய்த பொருட்களுக்குள் மோட்டார் போன்றவற்றை பொருத்தி இயங்க வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ராணுவத்தின் மீது இருந்த காதல் தான் எனக்கு இந்த திறமையை உருவாக்கியது என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் ஆனந்தராஜ்.

இதுகுறித்து ஆனந்தராஜ் பெற்றோர்களிடம் கேட்டபோது...
நாங்கள்தான் விவசாயம், வேலை என படிக்காமல் விட்டு விட்டம். அதனால் என் மகன் படிக்க வேண்டும் என கூலி வேலை பார்த்து படிக்க வைத்தும் அவனுக்கு இந்த கிராப்ட் செய்வதில்தான் ஆர்வம் அதிகமாக உள்ளது. முதலில் திட்டினாலும் எதற்காக இப்படி செய்கிறாய் என ஆத்திரமடைந்தோம் ஆனால் அவனுக்கு இதிலிருந்து ஆர்வம் குறையவில்லை. பிறகு அவனது விருப்பம் என விட்டுவிட்டோம். பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப படிப்பையும், வேலையையும் செய்ய சொன்னால் தான் நிம்மதியாக இருப்பார்கள். இல்லையென்றால் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். என் மகனுக்கு ஏதேனும் இந்த கிராஃப்ட் ஒர்க் சார்ந்து நல்ல பணி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

Tags : village youth ,Pudukottai , Thirumayam, paper
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...