×

இடியும் நிலையில் டாக்டர்கள் குடியிருப்பு: ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை வசதியின்றி தவிக்கும் நோயாளிகள்

நெமிலி: நெமிலி அடுத்த புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிதிலமடைந்த டாக்டர் குடியிருப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெமிலி அடுத்த புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 டாக்டர்கள், 3 நர்ஸ்கள் பணியாற்றி வருகின்றனர். டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் தங்கி பணியாற்றுவதற்காக, வளாகத்தில் அவர்களுக்கான குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. தற்போது, இந்த கட்டிடம் சிதிலமடைந்தும், சுவர்கள் இடிந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த கட்டிடத்தில் டாக்டர்கள், நர்ஸ்கள் யாரும் தங்குவதில்லை. ஆனாலும், இந்த குடியிருப்புக்கான வாடகையை டாக்டர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்வதாக கூறப்படுகிறது. மேலும், டாக்டர்கள், நர்ஸ்கள் வெளியில் தங்குவதால், அவசர காலங்களில் மருத்துவமனைக்கு வரமுடியாத நிலை உள்ளது. அவர்கள், உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் சிகிச்சை வசதியின்றி தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே, சிதிலமடைந்த குடியிருப்பு கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றி, புதிய குடியிருப்பு கட்டிடம் கட்டித்தர வேண்டும். அதேபோல், நெமிலி தாலுகா அந்தஸ்து பெற்று 4 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Residents ,Primary Health Center , Patients, Nemili, Primary Health Center
× RELATED ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு