×

விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது.. முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் : தபெதிக கு.ராமகிருஷ்ணன் பேட்டி

கோவை, : ‘‘ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்த முத்தையா முரளிதரன் கிரிக்கெட் வாழ்க்கை வரலாறு படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது,’’ என தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கை படமாகிறது. இதில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என தமிழ் அமைப்புகள், பெரியார் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் ராஜபக்சேவின் ஆதரவாளரான முத்தையா முரளிதரனின் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியதாவது: விஜய் சேதுபதி மனிதாபிமானமுள்ள நல்ல முற்போக்காளர். பெரியார் கருத்தில் பற்றுள்ளவர். அவர் முரளிதரன் வேடத்தில் நடிப்பதை சினிமா கலை தானே என்று உருவகப்படுத்திப் பார்க்கக் கூடாது. விஜய் சேதுபதி நடித்தால் அது உலக தமிழர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கும்.

முத்தையா முரளிதரன் முழுக்க முழுக்க ராஜபக்சேவுக்கு ஆதரவாளராக இருந்தவர். தமிழர்களுக்கு எந்த ஆதரவும் கொடுக்காமல் சிங்கள மக்களுக்கு ஆதரவாக இருந்தவர். தமிழகத்தில் இப்படம் வெளியானால் மறைமுகமாக ராஜபக்சேவிற்கு ஆதரவாக அமையும். சினிமா ஊடகத்தின் மூலம் வெளிவரும் தகவல்கள், விடுதலை உணர்வில் பின்னடைவை ஏற்படுத்தும். ஆகவே விஜய் சேதுபதி இவ்வேடத்தில் நடிக்க கூடாது. அதையும் தாண்டி நடித்தால் அந்த படத்தை வெளியிட திரையிட விட மாட்டோம்.இவ்வாறு கு.ராமகிருஷ்ணன் கூறினார்.

Tags : Vijay Sethupathi ,Muttiah Muralitharan ,Tabedika K. Ramakrishnan , Vijay Sethupathi, Muthiah Muralitharan, Life, History
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்