×

கம்பளியை குறைந்த விலைக்கு தராததால் வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்கள்

கிருஷ்ணகிரி: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாஷா(38). கடந்த 5 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி லைன்கொல்லை பகுதியில் வசித்து வருகிறார். இவர், பெங்களூரு சாலையில் டான்சி அருகில் சாலையோரமாக கம்பளி மற்றும் பெட்ஷீட் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல், கம்பளி விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் 2 பெண்கள் உள்பட 4 பேர், கம்பளியை வாங்க வந்தனர். அப்போது காதர்பாஷா கூறிய விலையை விட குறைத்து தருமாறு கூறியுள்ளனர். அந்த விலைக்கு தர முடியாது என காதர்பாஷா கூறியதால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்த 4 பேரும், வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து வந்து, காதர்பாஷா மீது ஊற்றி தீ வைத்து விட்டு சென்றனர். இதில் காதர்பாஷாவிற்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, அவர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். கம்பளி வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : persons ,trader , Krishnagiri, Merchant, Petrol, Fire
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...