×

நெல்லை தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது அதிகரிப்பு: சுகாதார குறைபாடால் மக்கள் அவதி

நெல்லை: நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தாமிரபரணியில் நேரடியாக கலப்பது அதிகரித்துள்ளது. சுகாதார குறைபாடு ஏற்படுவதால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நெல்லை மாநகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் பல இடங்களில் முழுமை பெறாமல் உள்ளது. இதனால் மேலப்பாளையம், மீனாட்சிபுரம், வீரராகவபுரம், கைலாசபுரம் மற்றும் சிந்துபூந்துறை, உடையார்பட்டி உள்ளிட்ட மாநகர பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அதிகளவில் தாமிரபரணியில் நேரடியாக கலக்கின்றன.

சிந்துபூந்துறை பகுதியில் வெளியேறும் கழிவுநீர் மாநகர எல்லைப்பகுதியில் தாமிரபரணியில் கலப்பதை தடுக்க நதிக்கரையையொட்டி பெரிய அளவில் கான்கிரீட் கழிவுநீர் ஓடை கட்டப்பட்டது. ஆனால் இதில் போதிய பராமரிப்பு இல்லாததால் சில இடங்களில் ஓடையின் கீழ்பகுதி வழியாக கழிவுநீர் வெளியேறி மீண்டும் தாமிரபரணியில் கலக்கத் தொடங்கி உள்ளது. இதுகுறித்து சிந்துபூந்துறை பகுதி மக்கள் கூறுகையில், இங்கு கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க தாமிரபரணி கரையோரம் பெரிய ஓடை அமைத்திருந்தனர். இதன் அருகே சற்று தூரத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்காக சம்ப் கட்டும் பணி நடந்தது.

இதனால் கழிவுநீர் அங்கு செல்வதை தடுக்க சிந்துபூந்துறை எரிவாயு தகன மையம் அருகே தற்காலிகமாக கழிவுநீரை ஆற்றுப்பகுதியில் திருப்பி விடப்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு அதனை முழுமையாக சரி செய்யவில்லை. தற்போது ஓடையின் கீழ்பகுதி வழியாகவும் கழிவுநீர் அதிகளவில் ஆற்றில் நேரடியாக கலக்கிறது. இந்த இடத்தில் தான் தினமும் ஏராளமான பொதுமக்கள் துணி துவைத்து குளிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து நிறைவேற்றி கழிவுநீர் ஆற்றில் நேரடியாக கலப்பதை தடுக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Nellai Tamiraparani , Nellai, Tamiraparani, sewage
× RELATED நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்...