×

பேட்டை அருகே துணிகரம் கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகை கொள்ளை

பேட்டை: நெல்லையை அடுத்த பேட்டை அருகே கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். மாடியில் குடும்பத்துடன் தூங்கிய போது இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. நெல்லை அருகே பேட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட அபிசேகப்பட்டி எம்.எஸ்.யுனிவர்சிட்டி நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் செல்வராஜ்(45). நெடுஞ்சாலை துறையில் கான்ட்ராக்டராக உள்ளார். இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மனைவி, மகள்களுடன் செல்வராஜ், வீட்டின் மொட்டை மாடியில் தூங்கினார்.

நள்ளிரவு 1 மணியளவில் குளிர்ந்த காற்று வீசியதாலும், மழைக்கான அறிகுறி தென்பட்டதாலும் அனைவரும் கீழே வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 25 பவுன் நகை, ரூ.1200 கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். செல்வராஜ் குடும்பத்துடன் மாடியில் தூங்கச் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் காம்பவுன்ட் சுவர் ஏறிக்குதித்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் முன்பக்க கதவு தாழ்பாளை கடப்பாறையால் நெம்பி திறந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேல்கனி, டவுன் குற்றப்பிரிவு எஸ்ஐ அப்துல்காதர் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 நாய்கள் விஷம் வைத்து சாகடிப்பு

செல்வராஜ், நெடுஞ்சாலை துறையில் கான்ட்ராக்டராக உள்ளதால் பெரும்பாலும் வெளியூர் சென்றுவிடுவார். ஒன்று, இரண்டு மாதங்கள் கழித்து வீடு திரும்புவார். வீட்டின் பாதுகாப்புக்காக நாய்கள் வளர்த்து வந்தார். ஆனால் அந்த நாய்களை மர்மநபர்கள் விஷம் வைத்து கொன்றுள்ளனர். ஒரு நாய் இறந்தவுடன் புதிதாக நாய் வாங்கி வந்து வளர்ப்பார். அதனையும் மர்மநபர்கள் விஷம் வைத்து கொன்றுள்ளனர். 4 வருடத்தில் 15க்கும் மேற்பட்ட நாய்களை மர்மநபர்கள் கொன்றுள்ளனர். இதனால் மனம் வெறுத்துப்போன செல்வராஜ், தற்போது நாய் வளர்ப்பதை நிறுத்திவிட்டதால், மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

அடமானத்தில் இருந்த நகை

செல்வராஜ் வீட்டில் கொள்ளை போன 25 பவுன் நகை, கடந்த வாரம் வரை வங்கியில் அடமானத்தில் இருந்துள்ளது. கடந்த திங்கட்கிழமைதான் அதனை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். ஒருவாரம் கூட ஆகாத நிலையில் மர்மநபர்கள், நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

Tags : Venture contractor ,hood ,house ,jewelery , Jewelry, robbery
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்