×

விண்ணப்பம் பெற்று 9 மாதங்களை கடந்த நிலையில் அரசு கல்லூரிகளுக்கான பேராசிரியர் நியமனம் எப்போது?

சேலம்: தமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பம் பெற்று 9 மாதம் கடந்த நிலையில், நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ், 116 அரசு கலைக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு, சுமார் 4,500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிதாக பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியிடப்பட்டது. ஒருசில காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது. பின்னர், அக்டோபர் மாதத்தில் 73 பாடங்களுக்கு 2,331 பேராசிரியர்களை நேர்முகத்தேர்வு அடிப்படையில் நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் தங்களது அனுபவ சான்றிதழ்களை பெறுவது மற்றும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் எழுந்த சிக்கல் காரணமாக அடுத்தடுத்து கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

இறுதியாக கடந்த ஜனவரியுடன் விண்ணப்ப நடவடிக்கை முடிந்ததால், ஓரிரு வாரத்தில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, பணி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உயர்கல்வித்துறையின் மெத்தனத்தால் காலதாமதம் ஏற்பட்ட நிலையில், கொரோனா பரவலால் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. 9 மாதங்களை கடந்த நிலையில், பேராசிரியர் நியமனம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் இல்லாததால், விண்ணப்பித்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கூறியதாவது:

தமிழக அரசு கலைக்கல்லூரிகளுக்கு கடந்த 2014-15ம் ஆண்டுக்கு பிறகு, புதிதாக பேராசிரியர் நியமனம் செய்யப்படவில்லை. ஐந்து வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியானதால், ஆர்வத்துடன் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். ஆனால், ஆன்லைன் குளறுபடி காரணமாக, ஏராளமானோர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பலரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருந்தபோதிலும், பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் விண்ணப்பித்த பலர், பணி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் தாமதத்தால், கொரோனா ஊரடங்குக்கு முன்பாக நேர்முகத்தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது விண்ணப்பம் பெற்று 9 மாதம் கடந்துவிட்ட நிலையில், இதுவரை தேர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கொரோனா பரவல் குறையவில்லை என்றாலும், பல தளர்வுகள் வழங்கப்பட்டு, வழக்கமான நடைமுறைகளுக்கு மக்கள் மாறி விட்டனர். எனவே, பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வை நடத்தும் நடவடிக்கைகளில் உடனடியாக உயர்கல்வித்துறை ஈடுபட வேண்டும். இன்னும் ஓரிரு மாதங்கள் தாமதம் செய்தால், சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வந்து விடும். அதன்பின்னர் எந்தவித நியமனமும் செய்ய வாய்ப்பில்லை. தேர்தல் நடவடிக்கைகள் முடிந்து, அடுத்த ஆண்டு ஜூன் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, இதுபோன்ற சிரமங்களை கருத்தில் கொண்டு, பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : government colleges , Government College, Professor
× RELATED தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல்...