×

நாகர்கோவில் பகுதியில் திறந்த வெளி பாராக மாறிய நான்கு வழிச்சாலை

நாகர்கோவில்:  நாகர்கோவில் அருகே 4 வழிச்சாலைகள் திறந்த வெளி பாராக செயல்படுகிறது. எனவே போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கன்னியாகுமரி முதல் வில்லுக்குறி வழியாக கேரள மாநில எல்லையான காரோடு வரை மற்றும் வில்லுக்குறியில் இருந்து காவல்கிணறு வரை முழுவதும் கான்கிரீட்டால் நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் நாகர்கோவில் - காவல்கிணறு, அப்டா சந்தை - புத்தேரி 4 வழிச்சாலை பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்று விட்டன.  சுற்றிலும் பார்க்க அருமையான இயற்கை காட்சிகளுடன், தொடர்ச்சியாக வீசும் காற்றும் இங்கு பல்வேறு மக்களை ஈர்த்து வருகின்றன.

ஆரல்வாய்மொழி, திருப்பதிசாரம் பகுதிகளில் 4 வழிச்சாலையை பொதுமக்கள் போக்குவரத்திற்கும், நடை பயிற்சி மற்றும் வாகனம் ஓட்டி பழகவும் பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் மதுபானம் அருந்தும் கூடங்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், தற்போது மாலை நேரத்தில் மது பிரியர்கள், மது பாட்டில்களுடன் மதி மயங்க நான்கு வழிச்சாலைகளில் தஞ்சம் அடைகின்றனர். மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை புத்தேரி, அப்படா சந்தை பகுதி மற்றும் தோவாளை பகுதிகளில் இவ்வாறு மது அருந்த வரும் கூட்டம் அதிகமாகி வருகிறது. மது அருந்துபவர்கள் அங்கேயே மது பாட்டில்களை வீசி செல்வதுடன், சில நேரங்களில் ரகளையிலும் ஈடுபடுகின்றனர்.  இதனால்,  இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் வீடுகளில் வசிப்பவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே போலீசார் மாலை மற்றும் இரவில் 4 வழிச்சாலைகளில் ரோந்து செல்ல கோரிக்கை எழுந்துள்ளது.

கால்வாய் கரைகளிலும் அட்டகாசம்

நான்கு வழிச்சாலைகள் மட்டுமின்றி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களிலும் குளங்கள், கால்வாய்கள் கரையோரங்கள் வயல்வெளிகளிலும் அமர்ந்து கும்பலாக மது அருந்தி வருகின்றனர். குறிப்பாக சீதப்பால் ஔவையாரம்மன் கோயில், செண்பகராமன்புதூர் பகுதிகளில் தோவாளை கால்வாய் கரைகளில் பகல் முழுவதும் மது பிரியர்களால் நிரம்பி வழிகிறது. மது அருந்துபவர்கள் கூட்டத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

பேரிகார்டு அமைப்பு

அப்டா சந்தையிலிருந்து காவல்கிணறு செல்லும் 4 வழிச்சாலையில், நாக்கால்மடம் அருகே பிராந்தநேரி குளத்தில் பாலம் அமைக்க வேண்டி இருப்பதால், அந்த இடம் தவிர இதர பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டு விட்டது. இங்கு பாலத்தின் கிழக்கு பகுதியில், சாலை யின்றி உள்ளது. ஆனால், இச்சாலையை திருப்பதிசாரம், தாழக்குடி செல்லும்மக்கள் பயன்படுத்தி வருவதால், தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று தினகரனில் செய்தி வெளியாகி இருந்தது, இதனையடுத்து, சாலையில் சிமென்ட் கற்கள் மூலம் தடுப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், அந்த கற்களை நகர்த்தி வைத்து விட்டு சிலர் வாகனங்கள் ஓட்ட பயன்படுத்தி வருகின்றனர்.

பேட்டரிகள் திருட்டு

4 வழிச்சாலையில்  பழையாற்று பாலம் அருகில் உள்ள அறையில் மின்தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த பேட்டரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதுபோல் அப்டா சந்தை அருகில் சாலை அமைக்க பயன்படும் வாகனத்தில் இருந்து பேட்டரிகள் திருடப்பட்டுள்ளன. இதுபோன்ற பேட்டரிகளை பேட்டரி வேலை தெரிந்தவர்கள்தான் திருடி சென்றிருக்க முடியும். இதுபற்றி வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bar ,area ,Nagercoil , Four lanes road, Nagercoil
× RELATED சேலம் - வாணியம்பாடி இடையே 6 வழிச்சாலை...