×

144 தடை அமலில் உள்ளதால் குலசை தசரா திருவிழாவில் சப்பர ஊர்வலத்திற்கு தடை

உடன்குடி: 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளதால் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் தசரா குழுக்கள், சப்பர ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்செந்தூர் ஆர்டிஓ தனப்ரியா தெரிவித்தார். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால் விதிமுறைகளுக்கு உட்பட்டு கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மார்ச் இறுதிவாரம் துவங்கிய 144 தடை உத்தரவு தொடர்ந்து இம்மாதம் இறுதிவரை அமலில் உள்ளது. இருப்பினும் இதில் ஒரு சில கட்டுப்பாடுகளை மட்டும் தமிழக அரசு தளர்த்தியுள்ளது.

இந்தாண்டுக்கான தசரா திருவிழா இக்கோயிலில் வரும் 17ம் தேதி காலை கொடியேற்றம், திருக்காப்பு கட்டுதலுடன் துவங்கி 27ம் ேததி வரை 11 நாட்கள் நடக்கிறது. 26ம் தேதி நள்ளிரவு சூரசம்காரத்தைத் தொடர்ந்து 27ம்தேதி காப்பு அவிழ்த்தல், கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறுகிறது. பொதுவாக தசரா திருவிழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் முதலாவது, 10வது மற்றும் 11வது திருவிழா நாட்களில் பக்தர்கள் பங்கேற்க முழு அனுமதி மறுத்துள்ள மாவட்ட நிர்வாகம், மற்ற திருவிழா நாட்களில் ஆன்லைனில் பதிவு செய்து தினமும் 8 ஆயிரம் பேர் தரிசனம் செய்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் தசரா குழுவினர் பல்வேறு அமைப்பினர் காப்பு கட்டும் நிகழ்வு, சூரசம்காரத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் குலசேகரன்பட்டினத்தில் திருச்செந்தூர் ஆர்டிஓ தனப்ரியா, ஏஎஸ்பி ஹர்ஸ்சிங் தலைமையில் தசரா குழுக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற ஏராளமான தசரா குழுவினர் கோரிக்கை குறித்த தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். குறிப்பாக தசரா குழுக்கள் வெளியூர், பக்கத்து கிராமங்களில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு சென்று காணிக்கை வசூல் செய்யவும், 10ம்நாள் திருவிழாவில் மேடை அமைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், முத்தாரம்மன் கோயில் சப்பர பவனி நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த ஆர்டிஓ தனப்பிரியா பேசுகையில், ‘குழந்தைகள், முதியவர்களை அதிக அளவில் தாக்கும் கொரோனா தொற்று நோயில் இருந்து தப்பிக்க மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளதால் தசரா குழுக்கள், சப்பர ஊர்வலத்திற்கு கட்டாயம் அனுமதி கிடையாது. கொரோனா பரவலின் தாக்கம் இன்னும் குறையாமல் அதிக அளவில் உள்ளதால் அரசு விதித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அடுத்து வரும் ஆண்டில் தசரா திருவிழாவை வெகு சிறப்பாக கொண்டாடலாம்’’ என்றார். கூட்டத்தில் திருச்செந்தூர் தாசில்தார் முருகேசன், உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, ஆய்வாளர் பகவதி, குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ராதிகா மற்றும் தசரா திருவிழா குழுவினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

பல்வேறு இடர்பாடு

லட்சகணக்கானோர் பங்கேற்கும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்கள் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் முத்தாரம்மன் கோயில் தசரா பக்தர்கள், குழுவினர் உள்ள நிலையில் ஆலோசனை கூட்டத்தை அவசர கோலத்தில் நடத்துவதிலேயே அரசு அதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் குறியாக உள்ளனர். ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்தின்போதும் ஒரு சில குழுக்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்பதோடு மற்ற தசரா குழுவினருக்கு இதுகுறித்து முறையாகத் தகவல் கூட தெரியப்படுத்தப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இதனால் தற்போதைய நிலவரம் குறித்து பல்வேறு தசரா குழுவினருக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே இனிவரும் காலங்களில் நடத்தப்படும் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து தசரா குழுக்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க ஏதுவாக முன்னதாகவே அழைப்புகள் விடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : festival ,Kulasa Dasara , Tasara Festival, Kulasai
× RELATED திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை...