×

டெல்லியில் சீன தூதரகம் முன் பரபரப்பு போஸ்டர் :எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீங்க!... பாஜக நிர்வாகியின் தைவான் ஆதரவு சுவரொட்டியால் கடுப்பான சீனா

புதுடெல்லி, :கடந்த 7ம் சீனத் தூதரகம் சார்பாக இந்திய  ஊடகங்களுக்கு ஓர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், தைவான் தேசிய தினம்  எனக்கூறி, இந்திய ஊடகங்களில் செய்திகள் போட வேண்டாம்’ என்று  அறிவுறுத்தியது. ஆனால், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவான் வெளியுறவு  அமைச்சகம், ‘இந்தியா துடிப்பான ஊடக சக்தி கொண்ட நாடு. சுதந்திரத்தை  விரும்பும் மக்களை கொண்டுள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். ஆனால்  கம்யூனிஸ்ட் நாடான சீனா அனைத்து நாடுகளின் மீதும் அடக்குமுறைகளை கையாண்டு  வருகிறது. அவர்களின் கோரிக்கை இந்தியா ஏற்கக் கூடாது’ என்று ெதரிவித்தது.

இதற்கிடையே சீனாவுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ‘இந்திய  ஊடக சுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாப்போம். ஊடகங்கள் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது’ என்று கூறியது.  இந்நிலையில், தைவான் நாட்டின் தேசிய தினமான (நேற்று முன்தினம்) டெல்லியில் உள்ள சீன தூதரக எதிரே, பாஜக இளைஞர் தலைவர் தாஜிந்தர் பால் சிங் பாகா என்பவர், சில சுவரொட்டிகளை வைத்தார். அதில், தைவானின் தேசிய தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இருந்தது. இந்த செய்தி சர்வதேச மீடியாக்களில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருவதால், சீனா தனது அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் மூலம் பாஜக நிர்வாகி பாகாவை அச்சுறுத்தி உள்ளது.

அதில், ‘சில ஊடக செய்திகளில் டெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு வெளியே தைவானை ஆதரித்து சுவரொட்டிகள் இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன. அதில் இனிய தேசிய  தினம் என்று எழுதப்பட்டுள்ளது. தைவானுக்கு ஆதரவாக இதுபோன்ற வேலைகளைச் செய்வதன் மூலம் பாகா நெருப்புடன் விளையாடுகிறார். எரிகிற தீயில் எரிபொருளை ஊற்றுவது போன்று உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு ஏற்கனவே கசப்பான நிலையில், இதுபோன்ற செயல்கள் இருதரப்பு உறவைக் கெடுக்க மட்டுமே உதவும்’ என்று அந்த நாளிதழில்  எழுதப்பட்டுள்ளது.

Tags : embassy ,Delhi ,Chinese , Delhi, Chinese Embassy, BJP executive, Taiwan support, poster, China
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...