×

திருமுல்லைவாயல் சி.டி.எச் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்: வாகன ஓட்டிகள் அவதி

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் சி.டிஎச் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, இச்சாலை வழியாக தான் ஆவடி பகுதியில் உள்ள ராணுவத்துறை  நிறுவனங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், இந்திய உணவு கழகம், ரயில்வே பணிமனை ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் தினமும் சென்று வருகின்றனர். மேலும், இச்சாலையை பயன்படுத்தி பொதுமக்கள், வியாபாரிகள்  என பல தரப்பினரும் சென்று வருகின்றனர். இதனால் எப்போதும் பரப்பரப்பாகவே இருக்கும்.

இந்நிலையில், இந்த சாலை அமைந்துள்ள திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் நுழைவு வாயில் அருகில் முடங்கி கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் சமூக விரோதிகள் சிலர் திருட்டுத்தனமாக கழிவுநீர் (செப்டிக் டேங்க் கழிவுகள்) இணைப்பு  கொடுத்துள்ளனர். இதில் இருந்து பல மாதங்களாக கழிவுநீர் ஆறாக சி.டி.எச் சாலையில் ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.  இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், “சி.டி.எச் சாலையில் கனரக வாகனங்கள் செல்லும்போது கழிவுநீர் சிதறி இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது விழுகின்றன.

இதனால் பாதசாரிகளின் உடைகள் பாழாகிறது. மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் கழிவுநீரில் வழுக்கி விழுந்து காயம் அடைக்கின்றனர். கழிவு நீரால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சி.டி.எச்  சாலை குண்டும், குழியுமாக மாறி வருகிறது. சரஸ்வதி நகர் சந்திப்பில் சேதமடைந்த சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.  இதனால் இப்பகுதியில் உள்ள பள்ளம் தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள்  எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, மாநகராட்சி  அதிகாரிகள் கவனித்து  ஆவடி பகுதியில் முடங்கி கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீரை   (செப்டிக் டேங்க் கழிவுகள்) திருட்டுத்தனமாக   இணைப்பதை தடுக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்” என்றனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு ஆவடி மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் முடங்கி கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் இணைப்பை சிலர் திருட்டுத்தனமாக பயன்படுத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



Tags : river ,Motorists ,road , Sewage flowing into Thirumullaivayal CDH road: Motorists suffer
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...