×

மாமல்லபுரம் - எண்ணூர் வெளிவட்டச்சாலை பணியால் பாதிக்கப்படும் குடியிருப்புகள் பாசன வாய்க்கால்கள்

திருப்போரூர்: மாமல்லபுரத்தில் இருந்து எண்ணூர் துறைமுகம் வரை பூஞ்சேரி, திருப்போரூர், சிங்கபெருமாள் கோவில், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், தச்சூர், பெரியபாளையம், காட்டுப்பள்ளி வழியாக 110 கி.மீ. தூரத்திற்கு  வெளிவட்டச்சாலை அமைக்க மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு முடிவு செய்தது.  இப்பணிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்டல், வரைபடம் தயாரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே இந்த சாலை அமைக்கும் பாதையில்  ஏற்கனவே திட்டமிட்டபடி வண்டலூரில் இருந்து திருவள்ளூர் வரை ஓ.ஆர்.ஆர். (அவுட்டர் ரிங் ரோடு) என்கிற பெயரில் வெளிவட்டச்சாலை போடப்பட்டு சாலைப் பணிகள் முடிவடைந்து  வாகனங்கள் சென்று வருகின்றன.
அண்மையில் இந்த சாலையை ஜி.எஸ்.டி. சாலையுடன் இணைக்கும் வகையில் வண்டலூர் அருகே இணைப்பு பாலம் அமைக்கப்பட்டு முதல்வரால் திறக்கப்பட்டுள்ளது.

 மொத்தமுள்ள 5 கட்டப்பணிகளில் 3 கட்டப்பணிகள் முடிவடைந்து விட்டது.  4ம் கட்டப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் முதல் சிங்கபெருமாள் கோயில் வரையிலான 5ம் கட்டப்பணிகள் தற்போது தொடங்கி உள்ளது.
வண்டலூரில் இருந்து சிங்கபெருமாள் கோவில், அனுமந்தபுரம், சிறுங்குன்றம், வெங்கூர், மானாம்பதி வழியாக மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி சந்திப்பில் கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்கும் வகையில் இத்திட்ட வரைவு  அமைக்கப்பட்டது. ஆனால், இந்த சாலை செல்லும் கிராமங்கள், நிலங்கள், பாதைகள், பாலங்கள் அமைக்க வேண்டிய இடங்கள் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு அதற்கான சாலை வரைபடம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.  இத்திட்டத்திற்காக ஜப்பான் நாட்டு நிதி உதவி பெறப்பட்டுள்ளது. இருப்பினும் நிலங்களை கையகப்படுத்தி மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டிய பணி மாநில அரசைச் சார்ந்ததாகும்.

இதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூரை  அடுத்துள்ள மானாம்பதி கிராமத்தில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இச்சாலைப்பணிகள் முடிந்தால் டெல்டா மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் சென்னை நகருக்குள்  நுழையாமல், ஆந்திரா மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகியவற்றுக்கு கனரக வாகனங்கள் செல்ல முடியும். மிகப்பெரிய வர்த்தகப் போக்குவரத்துக்கான சாலையாக இந்த சாலை மாறும் என்றும், இதற்காக பொதுமக்களின் வீடுகள்  பாதிக்கப்படாமல் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டு வரைபடம் அளிக்கப்பட்டது.

ஆனால், தற்போது சாலை அமைய உள்ள வரைபடம் மாற்றப்பட்டு புதிய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடத்தால் மானாம்பதி ஊராட்சியில் அடங்கிய ஆமையாம்பட்டு கிராமத்தில் உள்ள இரண்டு தெருக்கள் முழுமையாக  பாதிக்கப்படுகின்றது.
60 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நடுத்தெருவில் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 42 குடும்பங்களின் கல்வீடுகளும், 10க்கும் மேற்பட்டோரின் குடிசை வீடுகளும், பலரின் காலி மனைகளும் இந்த  சாலைப்பணிக்காக கையகப்படுத்தப்பட உள்ளதாக அரசின் அறிவிப்பு கூறுகிறது.

இதுமட்டுமின்றி கிராமத்தின் இரவு பாடசாலைக் கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவையும் இடிக்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மானாம்பதி ஏரியில் இருந்து விவசாய  நிலங்களுக்கு இடையே செல்லும் பாசன வாய்க்கால்கள் மூடப்பட உள்ளன.இதனால் ஏரி நீர் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு தடைபடுவதோடு, பலத்த மழை பெய்யும்போது வெள்ள நீர் வெளியேறுவதற்கும் தடை ஏற்படும். ஏரி நீரை நிலங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவானால் இப்பகுதி விவசாய  நிலங்கள் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மானாம்பதி கிராமம் மட்டுமின்றி பூண்டி, ராயமங்கலம், விரால்பாக்கம், வெங்கூர், சிறுங்குன்றம், அனுமந்தபுரம், அஞ்சூர் போன்ற கிராமங்களும் இந்த சாலைத்திட்டத்தால் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. கிராமத்தின் விவசாய  நிலங்கள், ஏரிகள், பாசன வாய்க்கால்கள், வீடுகள், தண்ணீர் தொட்டிகள் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருக்க அஞ்சூர், அனுமந்தபுரம் கிராமங்களை ஒட்டி உள்ள வனப்பகுதியும், அதில் வசிக்கும் அரிய வகை விலங்கினங்களும் பாதிக்கப்படும் என்று  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
தங்களின் வீடுகளை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மானாம்பதி கிராமத்தில் கல் நட வந்த ஊழியர்களை பொதுமக்கள் விரட்டி அடித்த சம்பவமும் அண்மையில் நடைபெற்றது. இதனால், முதலில் எதிர்ப்பு இல்லாத இடங்களில் நில எடுப்பு  பணிகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு மற்ற இடங்களில் நில எடுப்பு பணிகளை செய்து சாலைப்பணிகளை தொடங்கி விட்டால் வீடுகளை கையகப்படுத்துவதை தடுக்க முடியாது என பொதுமக்கள் கருதுகின்றனர்.

வனஉயிரினங்களுக்கு பாதிப்பு

அஞ்சூர் வனப்பகுதியில் சிறுத்தைகள் வசிப்பது அண்மையில் அப்பகுதியில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சாலை அஞ்சூர் வனப்பகுதியில் வழியாக செல்வதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு  ஏற்படுவதோடு அவை மக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி வரும் ஆபத்தும் உள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த வனப்பகுதியில் அரிய வகை புள்ளிமான்கள், வெளி மான்கள், முள்ளம்பன்றிகள் உள்ளிட்டவை  வசிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Mamallapuram ,Residents , Mamallapuram - Residents affected by Ennore Outer Ring Road Irrigation Canals
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ