×

அடுத்தடுத்து 7 இடங்களில் வழிப்பறி: கொள்ளையன் சுற்றிவளைப்பு

பெரம்பூர்: வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் இரவு பைக்கில் வந்த ஒருவர், 5 லிட்டர் பெட்ரோல் வாங்கிக்கொண்டு, பணம் கேட்ட ஊழியர் சங்கரை (47) தலையில் கத்தியால்  வெட்டிவிட்டு, அவரிடமிருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு தப்பினார்.  சிறிது நேரத்தில் வியாசர்பாடி பகுதியில் ஸ்வேதா (21) மற்றும் சர்மா நகர் 11வது தெருவில் ஒருவரிடம் கத்தி முனையில் செல்போன்களை மர்ம நபர் பறித்து சென்றார். இதுகுறித்து எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனிடையே, கொடுங்கையூர் எழில் நகர் குப்பைமேடு அருகே வயதானவர் ஒருவரை தலையில் கத்தியால் வெட்டி விட்டு செல்போனை மர்ம நபர் பறித்து சென்றார். பின்னர், கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் மேலும்  ஒருவரிடம் செல்போன் பறிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, ஓட்டேரி மசூதி அருகே ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை மர்ம நபர் பறித்து சென்றார். மேலும், வில்லிவாக்கத்தில் ஒருவரிடமும் செல்போன் பறிப்பு நடந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்  நிலையங்களுக்கு புகார்கள் வந்தன. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த விவரங்கள் மற்றும் கொள்ளையனின் பைக் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, ஒரே நபர் 7 இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதன்பேரில், தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அந்த ஆசாமி முல்லைநகர் வழியாக சென்றதும்,  அதன் பிறகு அந்த பைக் எங்கே போனது என்பதும் தெரியாமல் இருந்தது. இதனையடுத்து வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் முழுவதும் வீடு வீடாக சோதனை செய்தபோது, மேற்கண்ட பைக் ஒரு வீட்டில் நிற்பது தெரிந்தது. அந்த வீட்டிற்குள்  அதிரடியாக நுழைந்து, அங்கிருந்த ஆசாமியை பிடித்தனர். விசாரணையில், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த அருண் (எ) கரண் (23) என்பதும், மேற்கண்ட 7 இடங்களில் தொடர் வழிப்பறி செய்ததும் தெரிந்தது.  அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : places ,siege ,Pirate , Sewage in 7 places in a row: Pirate siege
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்