×

விண்வெளி பூங்கா திட்டத்தில் எனது பணி நியமனம் குறித்து பினராய் விஜயனுக்கு தெரியும்: அமலாக்கத்துறையிடம் சொப்னா வாக்குமூலம்

திருவனந்தபுரம்: அமீரக தூதரகத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பின்னர் சொப்னாவுக்கு விண்வெளி பூங்கா திட்டத்தில் வேலை கிடைத்தது. இது குறித்து முதல்வர் பினராய் விஜயனுக்கு தெரியும் என்று சமீபத்தில் மத்திய  அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறையிடம் சொப்னா கொடுத்த வாக்குமூலம் வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2017ல் முதல்வர் பினராய் விஜயனின் வீட்டில் வைத்து அமீரக துணை தூதர் தனிப்பட்ட முறையில் சந்தித்து  பேசினார். அப்போது சிவசங்கரும், நானும் உடன் இருந்தோம். அன்று முதலே முதல்வர் பினராய் விஜயனுக்கு என்னை தெரியும். அரசு பணிகளுக்கு சிவசங்கரை தொடர்பு கொள்ளலாம் என்று அப்போது பினராய் விஜயன் கூறினார். இதன்  பிறகுதான் நானும், சிவசங்கரும் தொடர்பு கொள்ள தொடங்கினோம். தூதரகத்தின் அனைத்து பணிகளுக்கும் சிவசங்கர் என்னை தொடர்பு கொள்வார். விண்வெளி பூங்காவில் எனது பணி நியமனம் குறித்து முதல்வருக்கு நன்றாக தெரியும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாளை சிவசங்கர் கைது?: சிவசங்கரிடம் கடந்த 8,9 ஆகிய தேதிகளில் தொடர்ந்து 22 மணிநேரம் சுங்க இலாகாவினர் கொச்சியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சுங்க இலாகாவுக்கு பல்வேறு முக்கிய விவரங்கள் கிடைத்துள்ளதாக  கூறப்படுகிறது. சொப்னாவுடன் நெருக்கமாக இருந்த தனக்கு தங்க கடத்தல் குறித்து எதுவும் தெரியாது என்று சிவசங்கர் கூறியுள்ளார்.ஆனால் அதை சுங்க இலாகா நம்பவில்லை. மிக நெருக்கமாக இருந்த போதிலும் சொப்னா தலைமறைவாக  இருந்தபோது,அவரை தொடர்பு கொள்ளவில்லை என்று சிவசங்கர் கூறியதையும் சுங்க இலாகா நம்பவில்லை. மேலும் சொப்னா தலைமறைவாக இருந்தபோது ஒரு குறிப்பிட்ட நம்பரில் இருந்து அவருக்கு பலமுறை போன் வந்தது. அது  சிவசங்கராக இருக்கலாம் என்று சுங்க இலாகா கருதுகிறது. நாளை மீண்டும் சிவசங்கரிடம் ஆஜராக சுங்க இலாகா நோட்டீஸ் கொடுத்துள்ளது. அவருக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அவர் நாளை கைது செய்யப்பட வாய்ப்பு  உள்ளது.

‘நகலை கேட்க அதிகாரம் கிடையாது’

தன்னை கட்டாயப்படுத்தி சுங்க இலாகா வாக்குமூலம் பெற்றதாகவும், வாக்குமூலத்தின் நகலை தனக்கு வழங்க வேண்டும் என்றும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சொப்னா மனுதாக்கல் செய்தார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க சுங்க இலாகாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தது. அதில், சொந்த  வாக்குமூலத்தின் நகலை சொப்னா கேட்பது சட்டப்படி செல்லாது. இந்திய குற்றவியல் சட்டப்படி வாக்குமூலத்தை தர வேண்டும் என்று கூற அதிகாரம் கிடையாது.

உச்சநீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவும் பிறப்பித்துள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தில், தங்கம் கடத்தலில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் வெளிநாடுகளில், பொதுவாழ்வில் முக்கிய பங்கு  வகிப்பவர்களாக உள்ளனர். அதிகார வலிமை பெற்ற விஐபிகளான அவர்களை நாங்கள் நெருங்கி வருகிறோம். இந்த நேரத்தில் ெசாப்னாவின் வாக்குமூலத்தை நாங்கள் வெளியிட்டால் அவர்கள் அனைவரும் தப்பிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே  வாக்குமூலத்தை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Binarayi Vijayan ,Sopna ,Enforcement Department , Binarai Vijayan knows about my assignment in the Space Park project: Sopna's confession to the Enforcement Department
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...