×

பட்டியலின ஊராட்சி தலைவருக்கு நேர்ந்த நிகழ்வு தமிழ் மண்ணுக்கு அவமானம்: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: சிதம்பரம் அருகில் உள்ள தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டதற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஜனநாயக நெறிகளையொட்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஊராட்சி மன்றத் தலைவர், தரையில் அமர்ந்திருக்கும் அந்தப் படம், பொதுவாழ்வில் இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள தலைகுனிவு.  சமத்துவத்திற்கும்-ஜனநாயகத்திற்கும் எதிரான இதுபோன்ற இழிசெயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை.

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் கொட்டக்கச்சியேந்தல் ஊராட்சி மன்றங்களில் பட்டியலினத்தவர்தான் ஊராட்சி மன்றத் தலைவராக வேண்டும் என்பதற்காகவே, “சுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டை” நீட்டித்து, முதல்  உத்தரவு பிறப்பித்து-உள்ளாட்சித் தேர்தலை நடத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன்படி, நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, மேற்கண்ட உள்ளாட்சி மன்றங்களில் எல்லாம் தேர்தலை வெற்றிகரமாக நடத்தினோம். பட்டியலினத்தவர் வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவர்களாகவும் பதவியேற்க வைத்தோம்.

வெற்றி பெற்ற அந்த தலைவர்களை எல்லாம் சென்னைக்கு அழைத்து வந்து, முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் பாராட்டு விழா  நடத்தி-அரசு சார்பில் நிதி ஒதுக்கி-ஏன், திமுகவின் சார்பிலும் மேற்கண்ட பஞ்சாயத்துகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்து வளர்ச்சிப் பணிகளுக்கு வித்திட்டதும்-பட்டியலினத்தவர் உண்மையிலேயே அதிகாரம் பெற்றிட  வேண்டும் என நேர்மையாகவும், உண்மையாகவும் பாடுபட்டதும் திமுக தான். நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் எனது துறைச் செயலாளராக இருந்த அசோக் வரதன் ஷெட்டிக்கு“பட்டியலினத்தவர் ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருக்கும் பஞ்சாயத்துக்களை அடையாளம் கண்டு-அங்கு இதுமாதிரி  நிகழ்வுகள் நடக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” என்றும்-“அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று  எச்சரிக்குமாறும்” அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் அறிவுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர்களை, கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் நேரங்களில் திடீரென்று பார்வையிட வைத்து, இதுபோன்ற பின்னடைவான நிகழ்வேதும் நடக்காத வண்ணம் கண்காணிப்பு  செய்து, திமுக ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆகவே பட்டியலினத்தவரும்-பழங்குடியினத்தவரும் அதிகாரத்தில் பங்கேற்று மக்கள் பணி ஆற்றிட வேண்டும்-மாநிலத்தின் முன்னேற்றத்தில்-நாட்டின் வளர்ச்சியில் முனைப்புடனும் உரிமையுடனும் ஈடுபட வேண்டும் என்பதில் திமுக  என்றைக்கும் உறுதியுடன் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவருக்கு தெற்குத்திட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வு, சமூகநீதி போற்றும் தமிழ் மண்ணுக்கு நேர்ந்திருக்கும் அவமானம். ஆகவே இனி எந்த ஊராட்சியிலும்  இதுபோன்ற அவமரியாதை நடக்கக்கூடாது; அதிமுக அரசு அதனை அணுவளவும் அனுமதிக்கவும் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமன வயது குறைப்புக்கு கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர்கள் நேரடி நியமன வயதுவரம்பு 40 முதல் 45-க்குள் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக் கொள்கிறேன். வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு 10 லட்சம் ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றுவிட்டு 7 ஆண்டுகளாக வேலை இல்லாமல்  திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்கு வேலை வழங்க முடியாத அதிமுக அரசு, ஆசிரியர் கல்வி படித்தவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் இருள் சூழ வைக்கும் ஓர் அரசாணையை இதயமற்ற முறையில் வெளியிட்டுள்ளது. ஆகவே, ஆசிரியர்களின்  வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை எண் 12-ஐ உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்.



Tags : incident ,panchayat leader ,MK Stalin ,Tamil , The incident that happened to the panchayat leader on the list is an insult to the Tamil soil: MK Stalin strongly condemned
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...