பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தி 13வது முறையாக நடால் சாம்பியன்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச்சை (செர்பியா) நேர் செட்களில் வீழ்த்திய ரபேல் நடால் (ஸ்பெயின்), 13வது முறையாக கோப்பையை  முத்தமிட்டார். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரின் சாதனையையும் (20 பட்டம்) சமன் செய்து முதலிடத்தை நடால் பகிர்ந்து கொண்டுள்ளார். களிமண் தரை மைதானத்தில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் தொடர் என்றாலே, ரபேல் நடாலுக்கு கொண்டாட்டம் தான். அந்த அளவுக்கு இங்கு அவரது ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்து வருகிறது.

ஏற்கனவே 12 முறை பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த அவர், நேற்று நடந்த பரபரப்பான பைனலில் ஜோகோவிச்சை எதிர்கொண்டார். டென்னிஸ் ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த நடால், ஜோகோவிச்சின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்து 6-0 என்ற  கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் அபாரமாக விளையாடிய அவர் 6-2 என வென்று முன்னிலையை மேலும் அதிகரித்தார். எனினும், 3வது செட்டில் ஜோகோவிச் விடாப்பிடியாகப் போராடியதால் ஆட்டம் விறுவிறுப்பானது. இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து முன்னேறினர்.

ஜோகோவி கடுமையாக முயற்சித்தும், களிமண் தரை மைதானத்தில் நடாலின்  ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 2 மணி, 24 நிமிடத்துக்கு நடந்த இப்போட்டியில் நடால் 6-0, 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்று 13வது முறையாக பிரெஞ்ச் ஓபன் கோப்பையை முத்தமிட்டார். இதன் மூலமாக 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று முதலிடத்தில் இருந்த பெடரரின் சாதனையையும் அவர் சமன் செய்து அசத்தினார். ஜோகோவிச் 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார். இதுவரை களிமண்  தரை மைதானங்களின் மன்னன் என அழைக்கப்பட்டு வந்த நடால், இந்த வெற்றியால் ஈடு இணையற்ற சக்கரவர்த்தியாகவே முடிசூட்டிக் கொண்டுள்ளார் என்றால் மிகையல்ல. மகத்தான சாதனை படைத்துள்ள நடாலுக்கு உலக அளவில் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories:

>