திவாதியா - பராக் அதிரடியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

துபாய்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், திவாதியா - பராக் ஜோடியின் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் அப்துல் சமத் நீக்கப்பட்டு விஜய் ஷங்கர் இடம் பெற்றார். ராஜஸ்தான்  அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜெய்ஸ்வால், மகிபால், ஆண்ட்ரூ டை ஆகியோருக்கு பதிலாக ஸ்டோக்ஸ், பராக், உத்தப்பா சேர்க்கப்பட்டனர்.

வார்னர், பேர்ஸ்டோ இருவரும் ஐதராபாத் இன்னிங்சை தொடங்கினர். பேர்ஸ்டோ 16 ரன் எடுத்து கார்த்திக் தியாகி பந்துவீச்சில் சாம்சன் வசம் பிடிபட்டார். அடுத்து வார்னருடன் மணிஷ் பாண்டே இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய  இருவரும் 2வது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். அரை சதத்தை நெருங்கிய நிலையில், வார்னர் 48 ரன் (38 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆர்ச்சர் வேகத்தில் கிளீன் போல்டானார். சிறப்பாக விளையாடிய மணிஷ் பாண்டே 40 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார். அவர் 54 ரன் (44 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி உனத்கட் வேகத்தில் திவாதியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பிரியம் கார்க் 15 ரன் எடுத்து  கடைசி பந்தில் ரன் அவுட்டானார். சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் குவித்தது. வில்லியம்சன் 22 ரன்னுடன் (12 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராஜஸ்தான் பந்துவீச்சில் ஆர்ச்சர், கார்த்திக் தியாகி, உனத்கட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல்ஸ் களமிறங்கியது. ஸ்டோக்ஸ், பட்லர் இருவரும் துரத்தலை தொடங்கினர். ஸ்டோக்ஸ் 5 ரன் மட்டுமே எடுத்து கலீல் அகமது வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் 5 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.  பட்லர் 16 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, ராஜஸ்தான் அணி 4.1 ஓவரில் 26 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், சஞ்சு சாம்சன் - ராபின் உத்தப்பா ஜோடி 4வது விக்கெட்டுக்கு அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது. வழக்கத்துக்கு மாறாக நிதானமாக விளையாடிய இருவரும் 37 ரன் சேர்த்தனர். உத்தப்பா 18 ரன், சாம்சன் 26 ரன்  எடுத்து ரஷித் கான் சுழலில் மூழ்க, ராயல்ஸ் 12 ஓவரில் 78 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து பின்னடைவை சந்தித்தது.

ஐதராபாத் அணியின் பிடி இறுகிய நிலையில், ரியான் பராக் - ராகுல் திவாதியா இணைந்து உறுதியுடன் போராடினர். நம்பிக்கையுடன் அடித்து விளையாடிய இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் விழி பிதுங்கினர்.  இவர்களின் அபார ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்து வென்றது. சிக்சர் விளாசி வெற்றியை வசப்படுத்திய பராக், அசாம் மாநிலத்தின் பாரம்பரிய பிஹு நடனமாடி மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினார். ஆட்டம் முடிந்ததும் கலீல் - திவாதியா இடையே வாக்குவாதல் ஏற்பட்டது களத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.  ராகுல் திவாதியா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories:

>