×

முத்தலாக் ஷயரா பானு பாஜ.வில் இணைந்தார்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், உதம்சிங் நகர் மாவட்டத்தின் காஷிபூர் பகுதியை சேர்ந்தவர் ஷயரா பானு. இவரது கணவர் விரைவு தபால் மூலம் அனுப்பிய கடிதத்தில் மூன்று முறை `தலாக்’ கூறி, இவரை கடந்த 2015ல்  விவாகரத்து செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். முஸ்லிம்களின் தனி சட்டமான முத்தலாக் வழக்கத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முதல் இஸ்லாமிய பெண் இவர்தான்.  இந்த வழக்கில், முத்தலாக்கிற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. மேலும், இந்த நடைமுறையை குற்றமாக அறிவித்து, நாடாளுமன்றத்திலும் சட்டம் இயற்றும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.  அதன் அடிப்படையில், மத்திய பாஜ அரசும் சட்டம் இயற்றியது. இந்த வழக்கால், தேசிய அளவில் ஷயரா பானு புகழ் பெற்றுள்ளார்.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில பாஜ தலைவர் பன்சிதார் பகத்தை நேற்று முன்தினம் சந்தித்த ஷயரா பானு, பாஜ.வில் இணைந்தார். பின்னர், பானு அளித்த பேட்டியில் கூறியதாவது: முஸ்லிம் பெண்களின் வளர்ச்சிக்காக பாஜ எடுத்த  முற்போக்கு நடவடிக்கைதான் முத்தலாக் தடை சட்டம். இதனை நிறைவேற்ற பிரதமர் மோடி அரசு அர்ப்பணிப்புடன் எடுத்த நடவடிக்கை, முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அளித்துள்ளது. அதுவே, என்னை பாஜ.வை  நோக்கி ஈர்த்துள்ளது.
 சிறுபான்மையினருக்கு எதிரானது என்று பாஜ மீது ஏற்பட்டுள்ள தவறான கண்ணோட்டத்தை தகர்ப்பேன். தேர்தலில் போட்டியிடுதற்காக கட்சியில் சேரவில்லை. உயர்கல்வி மறுக்கப்படுதல் உள்பட முஸ்லிம் பெண்களுக்கு பல்வேறு அநீதி  இழைக்கப்படுகிறது. அவர்களின் உரிமைக்காக  போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Muthalak ,Shaira Banu ,BJP , Muthalak Shaira Banu joined BJP
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...