×

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: கண்ணன், மாநில செயலாளர், அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பணிகளில் மறைமுகமாக வட இந்தியர்களை கொண்டுவருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்து வருகிறோம். 2016ம் ஆண்டு நேரடி தபால்காரர் நியமனம் நடந்தது. இதற்கான தேர்வில் தேர்வானவர்கள்  அனைவரும் வட இந்தியர்கள். குறிப்பாக, அரியானா போன்ற மாநிலத்தில் இருப்பவர்கள் தேர்ச்சி பெற்றார்கள். தமிழ் படிக்க தெரியாதவர்கள் எப்படி தேர்வானார்கள் என்று எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. பெரும்பாலானோர் தமிழில் 25க்கு 23  மார்க் எடுத்திருந்தார்கள். ஆனால், தமிழகத்தில் இருப்பவர்கள் 19, 20 என மட்டுமே மார்க் எடுத்திருந்தார்கள். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 இதையடுத்து, தேர்வு எழுதியவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி அவர்களிடம் பேசினோம். அப்போது, அவர்களிடம் தமிழ் தெரியுமா என்று கேட்டால் தெரியாது என இந்தியில் பதில் அளித்தனர். பின்னர், எங்களின் சங்கம் கோவையில்  உண்ணாவிரதம் இருந்தோம். அஞ்சல் துறை இதில் தலையிட வேண்டும் என்று கூறினோம். ஆனால், அஞ்சல் துறை இந்த விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது. எங்களுக்கு வேறு வழி இல்லாமல் இயக்குனரகத்தில் புகார் அளித்தோம். அப்போது தான் இந்த தேர்வை கார்ப்பரேட் கம்பெனி ஒன்று நடத்தியது தெரியவந்தது. தமிழக அரசியல் கட்சிகளுக்கு இது குறித்து தெரிவித்தோம். அந்தந்த மாநிலத்தில் உள்ளவர்களுக்கு அவர்களின் மாநிலத்தில் உள்ள அரசு பணியை கொடுக்க  வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இந்த விவகாரம் சிபிஐ வசம் சென்றது. பின்னர் தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டது. காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை. இதேபோல், இதற்கான தேர்வையும் நிறுத்திவிட்டார்கள்.

 குறிப்பாக ஆளும் கட்சிக்கு இணக்கமாக இருக்கக்கூடிய மாநிலங்கள் மற்றும் பாஜவினர் இல்லாத மாநிலங்களில் இந்தி மற்றும் வட இந்தியர்களை கொண்டுவர வேண்டும் என்று இந்த தகிடுதத்தங்கள் நடைபெற்றது எங்களுக்கு தெரியவந்தது.  கேரளா, ஆந்திராவிலும் இதுபோன்று நடந்துள்ளது. ரயில்வே, வங்கி போன்ற அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் வட இந்தியர்கள் இதுபோன்று தான் உள்ளே வந்துள்ளார்கள் என்பதும் தெரியவந்தது. இனிமேல் கார்ப்பரேட் நிறுவனத்திடம் அரசு தேர்வு நடத்துவதை கொடுக்கக்கூடாது என்று கூறினோம். தற்போது நடைபெற்ற தேர்வில் 900 பேர் தமிழர்களே அஞ்சல் துறையில் வந்துள்ளார்கள். எங்களால் கொஞ்சம் மட்டுமே இதை தடுத்து  நிறுத்த முடிந்தது. மற்ற அரசு பணிகளில் வட இந்தியர்கள் உள்ளே நுழைவதை எங்களால் தடுத்து நிறுத்தமுடியவில்லை.  

இங்கு உள்ள இடங்கள் தமிழர்களுக்கு தான் கொடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் படித்துவிட்டு வேலையில்லாமல் கோடிக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டு எங்கோ வட இந்தியாவில் உள்ளவர்கள்  தமிழகத்தில் வேலைக்கு வருவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. படிப்பறிவு அதிக அளவில் இருக்கும் மாநிலங்களுக்கு படிப்பறிவே இல்லாத மாநிலங்களில் இருந்து எப்படி ஆட்கள் வர முடியும்.

ஆனால், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு கவனத்திற்கும் கொண்டுசெல்லவில்லை. குறைந்தபட்சம் சட்டசபையிலாவது தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக்கொண்டு  நடைமுறைப்படுத்தும் மனநிலையிலேயே இருக்கிறார்கள். அதனால் வந்த விளைவு தான் இது. தமிழக அரசு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே தமிழக அரசு பணிகள் முழுமையாக தமிழர்களுக்கே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த  விவகாரத்தில் அரசு முனைப்பு காட்ட வேண்டும்.

Tags : Assembly ,Secretary of State ,Kannan ,All India Postal Employees Union , Resolution to be passed in the Assembly: Kannan, Secretary of State, All India Postal Employees Union
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு