தமிழகத்தை மத்திய அரசு முழுமையாக புறக்கணிக்கிறது: சு.வெங்கடேசன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்

மத்திய அரசின் ஒவ்வொரு துறையுமே பணிகள் வழங்குதலில் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தெற்கு ரயில்வேயில் பல்வேறு துறைகளிலும் தேர்வு செய்யப்பட்டவர்களில், யார் யார், எந்தெந்த மாநிலத்தினர் என்ற கேள்வியை  நாடாளுமன்றத்தில் கேட்டேன். இந்த கேள்விக்கு பதில் தரவில்லை. இரண்டாவது கேள்வியாக, தேர்வெழுதியவர்கள் எந்த மொழியில் எழுதினார்கள் என்றேன். இந்த கேள்விக்கு பதிலாக, ரயில்வேயில் துணைப்பொறியாளர் வேலைக்கு  தேர்வெழுதி வென்ற 2,500 பேரில், 1,600 பேர் இந்தி மொழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் முழுப்பூசணிக்காயும் வெளியில் வந்து விட்டது.

மத்திய ரிசர்வ் காவல்படையான சிஆர்பிஎப் துணை மருத்துவ பணியிடங்களில் 850க்கும் அதிக காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான தேர்விற்கு ஒதுக்கிய 9 மையங்களில், வட மாநிலங்களில் 5 மையங்கள், கிழக்கு, மேற்கு மாநிலங்களில்  தலா ஒரு மையம், தென் மாநிலங்களில் கேரளா புள்ளிபுரத்திலும், தெலங்கானா தலைநகர் ஐதராபாத்திலும் மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகம், புதுச்சேரிக்கு ஒரு மையமும் இல்லை. இந்த தேர்வை எழுத கேரளாவிற்கோ, ஐதராபாத்திற்கோ செல்ல வேண்டும். முழு ரயில் வசதியற்ற நிலையில் எப்படி இடம் பெயர்ந்து போக முடியும்? இதற்கு தமிழகத்தில் விண்ணப்பிக்கவே மாட்டார்கள். விண்ணப்பித்தவர்களும் தேர்வெழுத  செல்ல முடியாத நிலையே இருக்கிறது. இது திட்டமிட்ட சூழ்ச்சி. , வட மாநிலத்தவர் தங்கள் தாய்மொழியில் தேர்வு பெறாத நிலையில், தமிழகத்தில் நடக்கும் தமிழ் மொழியில் தேர்வாவதும் நடக்கிறது. இங்கு ஏதோ தவறு நடக்கிறது.  திட்டமிட்ட அடிப்படையில் சூழ்ச்சி இருக்கிறது.

மத்திய அரசின் பணிகளில் புறக்கணிப்புகள் நீண்டு கொண்டே போகிறது. மத்திய தொல்லியல் துறையின் பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்கிற கல்வித் தகுதியில் சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி என பல மொழிகள் இருக்கிறது. ஆனால் அங்கு  தமிழ் இல்லை. செம்மொழி என்றால், 2004லேயே அறிவிக்கப்பட்ட தமிழ் உள்ளிட்ட செம்மொழியை அறிவித்திருக்க வேண்டும். சமஸ்கிருதம் படித்தவர் விண்ணப்பிக்கலாம். எம்ஏ தமிழ் படித்த மாணவரால் அந்த தேர்வுக்கு விண்ணப்பித்திட  முடியாது. நியாயமானவற்றை போராடி பெறும் நிலைதான் இங்கு இருக்கிறது.

 கல்வி, வேலை வாய்ப்புக்கான தகுதி, தேர்வு மையங்கள் என அனைத்திற்கும் பின்னால் தமிழகத்திற்குரிய நியதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது. இவை எல்லாமே கவனக்குறைவினாலோ, நிர்வாக தவறுதலாலோ நடக்கிற பிரச்னை  அல்ல. இவை மத்திய அரசின் அரசியல் அணுகுமுறையிலிருந்து வருகிற பிரச்னை. தமிழகத்திற்கு உரிய நியதியை வழங்க தயாராக இல்லாதது, மத்திய அரசின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கலாச்சாரத்தை  எழுதுவதற்கு அமைக்கப்பட்ட குழுவிலும் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடையாது, கலால் வரித்துறைக்கு வேலைக்கு ஆள் எடுப்பதிலும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை.  இன்னும் சொல்லப்போனால், ஆண்டுக்கு  ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வருமானத்தை மத்திய அரசுக்கு தமிழகம் அள்ளித் தந்து வருகிறது. ஆனால், அந்த பிரிவின் ‘ஹெல்ப் லைன்’ நம்பரில் விபரம் அறிய பேசினால், பதில் சொல்பவர் இந்தியில்தான் பேசுகிறார். நாம் தமிழில்  பேசினால், போனை வைத்து விடுவார். நம்மால் லாபம் பார்க்கும் ஒரு பிரிவிலாவது, தமிழில் பதில் சொல்ல நான்கு பேரை நியமிக்கக் கூடாதா?

 இதனை நிர்வாக பிரச்னையாக பார்க்க முடியவில்லை. அரசியல் அணுகுமுறை சார்ந்த பிரச்னையாகவே இருக்கிறது. மத்திய அரசு தமிழகத்திற்கான இடத்தை தர மறுப்பது வெளிப்படையானதாக உள்ளது. ஒவ்வொரு நாளும், மத்திய அரசின்  ஒவ்வொரு துறையும் இதே அணுகுமுறையைத்தான் கடைபிடித்து வருகிறது. தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.

Related Stories:

>