×

தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் தேர்தல் அறிக்கை தயாரிக்க 8 பேர் குழு: திமுக அதிரடி அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக சார்பில்  தேர்தல் அறிக்கை தயாரிக்க 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடைய உள்ளது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பு  ஜனவரி மாதம் இறுதியில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்னும் 5 மாதம் மட்டுமே எஞ்சியுள்ளதால் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்த தொடங்கியுள்ளது.

அதே நேரத்தில் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் பிரதான கட்சியான திமுக, அதிமுக தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  மாவட்டம் வாரியாக திமுக நிர்வாகிகள், தொண்டர்களிடம் காணொலி காட்சி வாயிலாக பேசி வருகிறார். அப்போது அவர் தேர்தல் தொடர்பாக கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும்  புதிய உறுப்பினர் சேர்க்கையையும் திமுக தீவிரப்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் அதிமுகவும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிமுக தரப்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரும் விரைவில் மாவட்டம், மாவட்டமாக சுற்றுப்பயணம்  மேற்கொள்ள உள்ளார்.
அதே போல மற்ற கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருகின்றன. இப்படி ஒவ்வொரு கட்சியும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியின்  சார்பில் தேர்தல் அறிக்கையும் தயாரித்து வெளியிடுவது வழக்கம். அதன்படி திமுக சார்பில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின்  பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டன.

இது தொடர்பாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொது செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், திமுக  மக்களவைகுழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, பேராசிரியர் அ.இராமசாமி இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

திமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு பல்வேறு துறை நிபுணர்கள், ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரின் கருத்துக்களை கேட்டு அறிக்கை தயாரிக்கும். அதன் பிறகு அந்த  அறிக்கை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படும். அவர் அதனை இறுதி செய்து தேர்தல் அறிக்கையாக வெளியிடுவார். ஒவ்வொரு நாடாளுமன்ற ேதர்தல், சட்டமன்ற தேர்தலில் திமுகவின் ேதர்தல் அறிக்கை தான்  “கதாநாயகனாக” திகழும். அந்த வகையில் மக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கையிருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags : committee ,Tamil Nadu Assembly , 8-member committee to prepare Tamil Nadu Assembly general election report: DMK Action Notice
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...