சாதாரண பெட்டிகளை நீக்க திட்டம்: மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள அனைத்து பெட்டிகளும் ஏசி மயமாகிறது

* டிக்கெட் விலை அதிரடியாக உயரும்

* ஏழைகளுக்கு ரயில் பயணம் எட்டாக்கனி

* கொரோனாவில் வருவாய் இழந்த மக்களுக்கு மேலும் ஒரு சுமை

சென்னை: அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண பெட்டிகளை நீக்கிவிட்டு, முழுமையாக ஏசி பெட்டிகளாக மாற்ற ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய பெட்டிகள் தயாரிக்கும் பணியும், பழைய பெட்டிகளை ஏசி  பெட்டியாக மாற்றும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அனைத்து அரசு துறை நிறுவனங்களிலும் அதிக வருவாயை ஈட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி வரும் மத்திய அரசு,  கட்டணங்களை உயர்த்தியது இது தவிர, மக்கள் நலனைப் பற்றி கடுகளவு கூட கவலைப்படாமல், தனியார் ரயில்களை இயக்குவதிலும் படு தீவிரம் காட்டி வருகிறது. இந்த வரிசையில், ரயில்களில் உள்ள சாதாரண வகுப்பு படுக்கை வசதி  பெட்டிகளை நீக்க முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள ஏசி அல்லாத பெட்டிகள் நீக்கப்படும்’’ என அறிவித்துள்ளார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள ரயில்வே கோச் பேக்டரியில், கடந்த மாதமே இத்தகைய ஏசி பெட்டிகள் தயாரிப்பு தொடங்கி விட்டது.  தற்போது முழு வீச்சில் பெட்டிகள் உற்பத்தி  செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. பெட்டியின் உட்பகுதியில் 3 அடுக்கு ஏசி டூரிஸ்ட் வகுப்பு பெட்டிகள் என அழைக்கப்படும். இவற்றில் வழக்கமாக சாதாரண பெட்டிகளில் இருக்கும் 72 படுக்கை வசதிகளுக்கு பதிலாக, 83 படுக்கை வசதிகள் இருக்கும்.

இருப்பினும், தற்போது 3 அடுக்கு பெட்டிகளில் உள்ளது போலவேதான் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டிருக்கும். பக்க வாட்டில் உள்ள ஜன்னலோரம் உள்ள 2 படுக்கை வரிசையிலும் மாற்றம் இருக்காது எனவே, எண்ணிக்கை அதிகரித்தாலும்  பயணிகளுக்கு வசதிகள் குறையாது. வழக்கமாக ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வை, விரிப்புகள் வைக்க அந்தந்த பெட்டிகளில் பிரத்யேக இடம் இருக்கும். தற்போது பயணிகளுக்கு போர்வை வழங்கப்படுவதில்லை. கொரோனா பரவலை தொடர்ந்து, எந்த ஏசி  பெட்டியிலும் பயணிகளுக்கு போர்வை வழங்கப்பட மாட்டாது. எனவே, புதிய பெட்டிகளில் அதற்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்காது.

 இதுபோல், ஏற்கெனவே உள்ள பழைய பெட்டிகளை ஏசி பெட்டிகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 280க்கும் மேற்பட்ட பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன இதற்காக, ஒரு பெட்டிக்கு ரூ.2.83 கோடி செலவாகிறது. இந்த திட்டத்தின்படி, மேற்கண்ட பெட்டிகள் சிக்கன ஏசி பெட்டிகளுக்கான கட்டணமாகவே நிர்ணயிக்கப்படும். அதாவது, சாதாரண 3 அடுக்கு மற்றும் 3 அடுக்கு ஏசி வகுப்பு ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக டிக்கெட் கட்டணம் இருக்கும் என்றனர்.

  பஸ்களுடன் ஒப்பிடுகையில் ரயில்களில் கட்டணம் மிகக் குறைவு. அதோடு வசதிகளும் அதிகம். இதனால்தான் நீண்ட தூர பயணத்துக்கு ரயில்களை தேர்வு செய்கின்றனர். 2ம் வகுப்பு, 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளை விட, சாதாரண பெட்டிகளில்  கட்டணம் மிகக் குறைவாக இருக்கும்.  ஆனால், மத்திய அரசின் லாபம் பார்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரயில்வே செயல்படுத்த உள்ள இந்த திட்டத்தால் சாதாரண வகுப்பை விட அதிக கட்டணத்தை மக்கள் செலவிட வேண்டி வரும். இது  அப்பாவி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் வாகனங்களை  ஏற்றிச் செல்ல புதிய இலக்கு

`கார் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்லும் சரக்கு சேவையை அடுத்த ஆண்டிற்குள் 20 சதவீதமாக உயர்த்த ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது,’ என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மோட்டார் வாகனங்களின்  கையாளும் சேவையை இந்தாண்டுக்குள் 20 சதவீதமாக உயர்த்த, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 2023-24ம் ஆண்டுகளில் 30 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.   இதுதொடர்பாக இந்திய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களான  டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மோட்டார்ஸ், போர்டு மோட்டார்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, ஹோண்டா சிட்டி, மாருதி சூசுகி லிமிடெட், ஆட்டோமொபைல் ரயில் சரக்கு ஆபரேட்டர்கள் போன்றவற்றின் பிரதிநிதிகளுடன் ரயில்வே  அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார். கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டத்தில், 836 ரேக்குகளில் கார் உள்ளிட்ட வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது கடந்தாண்டு 731  ரேக்குகளாக இருந்தது.

Related Stories:

>