×

குகன்பாறை-செவல்பட்டி சாலையில் குறுகலான பாலத்தால் விபத்து அபாயம்

சிவகாசி: வெம்பக்கோட்டை தாலுகா குகன்பாறையில் இருந்து செவல்பட்டி செல்லும் சாலையில் அலமேலுமங்கைபுரம் அருகே பாலம் குறுகலாக உள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து நிலவுகிறது. வெம்பக்கோட்டை அருகே குகன் பாறை கிராமம் உள்ளது. இங்கிருந்து கோவில்பட்டி, சங்கரன் கோவிலுக்கு சாலை அமைத்துள்ளனர். இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பாலம் அமைந்துள்ள சாலை 7 மீட்டர் வரை அகலமுடையது. ஆனால் அலமேலுமங்கைபுரம் அருகே சாலையை விட குறுகலாக பாலம் அமைத்துள்ளனர். இந்த பாலம் 5 மீட்டா் அகலம் மட்டுமே உள்ளது.

இதனால் வாகனங்கள் இந்த சாலையில் வேகமாக செல்லும் போது எதிரே வாகனங்கள் வந்தால் பாலத்தில் மோதி விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.மேலும் பாலத்தின் பக்கவாட்டில் ஒரு புறம் சிமெண்ட் தடுப்பு சுவரும், மறுபுறம் இரும்பு தடுப்பும் அமைத்துள்ளனர். இதில் இரும்பு தடுப்பில் எந்தவித எச்சரிக்கை ஸ்டிக்கரும் இல்லை. இரவில் வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்லும் போது தடுப்பு கம்பி இருப்பதே தெரிவதில்லை. இதனால் வாகனங்கள் இங்கு அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. இந்த சாலையில் வழக்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமே இங்கு எச்சரிக்கையுடன் சாலையை கடந்து செல்கின்றனர்.

வெளியூர் வாகன ஓட்டிகள் கவனகுறைவாக வரும் போது அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த சாலை சங்கரன் கோவில் செல்லும் வழியில் உள்ளது. மதுரை, விருதுநகர், சிவகாசி பகுதியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் பக்தர்கள் இந்த வழியில் தான் செல்கின்றனர். ஆனால் பாலம் குறுகலாகவும், பாலத்தின் தடுப்புசுவரில் எச்சரிக்கை ஸ்டிக்கர் இல்லாததாலும் வெளியூர் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். குகன்பாறை-செவல்பட்டி சாலையில் உள்ள பாலத்தை இடித்து அகலபடுத்த வாகன ஓட்டிகள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,road ,Kuganparai-Sevalpatti , Accident risk due to narrow bridge on Kuganparai-Sevalpatti road
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...