×

முடங்கிப்போனது கருத்தடை மையங்கள்: பெருக்கெடுக்குது தெருநாய் எண்ணிக்கை

கோவை: கோவை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் தெருநாய் கருத்தடை மையங்கள் செயல்படாமல் முடங்கி கிடப்பதால், மாநகரில் தெருநாய்களின் எண்ணிக்கை பெருக்கெடுத்துள்ளது. கோவை மாநகரில் பெருக்கெடுக்கும் தெருநாய்கள், பொதுமக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் இடையூறாக உள்ளன. இதன் பெருக்கத்தை கட்டுப்படுத்த, மாநகராட்சி சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரநாயக்கன்பாளையம் மற்றும் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் தலா ரூ.25 லட்சம் ெசலவில் இரு கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டன. மாநகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் மூலம் தெருநாய்கள் பிடித்து வரப்பட்டு, இம்மையத்தில் கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டு வந்தன.

ஒரு நாய்க்கு கருத்தடை ெசய்ய மாநகராட்சி  சார்பில் 444 ரூபாய் ெசலவிடப்பட்டது. இந்த நிதியில், 50 சதவீதம் பிராணிகள்  நல அமைப்பு சார்பில் வழங்கப்பட்டு வந்தது. முதல் இரண்டு ஆண்டுகள் இம்மையம், படுேவகமாக இயங்கியது. அதன்பிறகு, தனது ெசயல்பாட்டை நிறுத்திக்கொண்டது. போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது, ஊழியர் பற்றாக்குைற உள்ளிட்ட காரணங்களால் மாநகராட்சி நிர்வாகம் இம்மையத்தை கண்டுெகாள்ளவில்லை. இதன்விைளவாக, மாநகரில் மீண்டும் தெருநாய்களின் எண்ணிக்கை பெருக துவங்கிவிட்டது. இவை, சாலையோர இறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை சாப்பிடுவதற்காக ஆங்காங்கே படுத்துக்கிடக்கின்றன.

அவ்வப்போது சண்டையிட்டுக்கொண்டு, அந்த வழியாக நடந்து செல்லும் நபர்களை கடிப்பது தொடர்கிறது. குறிப்பாக, சிறுவர், சிறுமிகள், பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில், மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் இவை துரத்துகின்றன. பலருக்கு கடி விழுகிறது. இன்னும் சிலர் வாகனங்களில் இருந்து தடுமாறி கீழே விழுந்து, காயம் அடைகின்றனர். தெருநாய்களின் தொல்லையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. மாநகரில், நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, உயர்ந்து வரும் நிலையில், உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கொல்லக்கூடாது என்று பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தெருவில் சுற்றித்திரியும் நாய்கள்  பிடிக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் இரு ைமயங்களில் கருத்தடை செய்யப்பட்டு  வந்தது. இதன்மூலம், தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக இத்திட்டம் நின்றுபோனது. நகர்ப்புறத்தில் உள்ள இரு கருத்தடை மையங்கள், வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, மீண்டும் முழு வீச்சில் இயங்கும். அதற்கான நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அறிவிப்போடு நின்றுபோனது காப்பகம்
மாநகரில் தெருநாய் கருத்தடை ஆபரேஷன் மையத்தை நடத்த போதுமான அளவு நிதிவசதி இல்லை, அத்துடன், பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு வருவதால் இத்திட்டத்தை கைவிட்டு, வெள்ளலூர் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு வளாகத்தில் சுமார் ஒரு ஏக்கரில் தெருநாய் காப்பகம் அமைக்கப்படும் என கடந்த 2016-17ம் நிதியாண்டு மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இது வெறும் அறிவிப்போடு நின்றுபோனது.

2.56 லட்சம் பேருக்கு சிகிச்சை
ெவறிநாய் கடியால் பாதிக்கப்படுவோருக்கு கோவை அரசு மருத்துவமனையில் இம்யூனுனோ குளோபின் மருந்து கொடுக்கப்படுகிறது. தடுப்பூசி போடப்பட்டு, மருந்து, மாத்திரையும் வழங்கப்படுகிறது. இங்கு, கடந்த 8 ஆண்டுகளில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட 2.56 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

வரி வசூல் மையமாக மாறியது
கோவை உக்கடம் பகுதியில் செயல்பட்டு வந்த கருத்தடை மையத்துக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இம்மையம் நீண்ட நாட்களாக இயங்காமல், முடங்கி கிடந்தது. தற்போது இம்மையம், மாநகராட்சி வரி வசூல் அலுவலகமாக இயங்கி வருகிறது.

Tags : Contraception Centers , Paralyzed Contraceptive Centers Number of stray dogs
× RELATED தேவாரத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு