×

அருவங்காடு அருகே உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட காவல் நிலையம்: ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் காத்திருப்பு

குன்னூர்: அருவங்காடு பகுதியில் உரிய அனுமதி பெறாமல், கட்டப்பட்ட காவல் நிலையம் ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மாஸ்டர் பிளான் சட்டத்தின் படி 7 மீ. உயரத்திற்கு மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் 1500 சதுர அடிக்குள் மட்டும் கட்டிடம் கட்ட அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இந்நிலையில், அருவங்காடு காவல் நிலையம் பல ஆண்டுகளாக வெடிமருந்து தொழிற்சாலைக்கு உட்பட்ட கட்டிடத்தில் செயல்படுகிறது. இதைத்தொடர்ந்து சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக குன்னூர்-ஊட்டி சாலையில் நிலம் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இக்கட்டிடம் ஜெகதளா பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட அளவிலான (வேளாண் பொறியியல், புவியியல், வனத்துறை உள்ளிட்ட துறைகள் அடங்கிய) ஏ.ஏ.ஏ. கமிட்டியிடமும் எவ்வித அனுமதியும் பெறாமல், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது. அனுமதி பெற்றால்தான் திறக்க முடியும் என்பதால், காவல்துறை தரப்பில் ஜெகதளா பேரூராட்சியில் அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.

இதில் கட்டிடம் 1500 சதுர அடிக்கு மேல் உள்ளதால், மாவட்ட அளவிலான ஏ.ஏ.ஏ. கமிட்டிக்கு பேரூராட்சி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளதாக ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் காவல் துறை சார்பில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமல் உள்ளதால், அனுமதி வழங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், காவல் நிலையம் கட்ட உரிய அனுமதி பெறாமல், கட்டிடம் கட்டியிருப்பது தவறான செயல். இதே சாதாரண பொதுமக்கள் விதி மீறி கட்டிடங்கள் கட்டியிருந்தால் அவர்களின் நிலை என்னவாகி இருக்கும் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags : Police station ,Aruvankadu , Police station built without proper permission near Aruvankadu: Waiting for one and a half years without opening
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...