×

திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு பயன்படுத்திய கவச உடைகள் குப்பையில் கிடக்கும் அவலம்: நோய் பரவுவதாக மக்கள் அச்சம்

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா விற்கு பயன்படுத்தப்பட்ட கவச உடைகள் சிதறிக் கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. திருவாரூர் கலெக்டர் அலுவலக பின்புறத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் என நாளொன்றுக்கு சுமார் 800 பேர் வரையில் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மட்டுமின்றி உள்நோயாளிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி மேல் சிகிச்சைக்காக நாகை மாவட்டத்தில் இருந்தும் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்திய கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பு கவச உடைகள் மற்றும் முகக் கவசங்கள் என அனைத்தும் இந்த மருத்துவமனையின் வளாகத்தில் பிணவறை அருகே மலைபோல் சிதறி கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது.

ஏற்கனவே இந்த மருத்துவமனையின் கழிவுகள் அனைத்தும் இந்த பிணவறை அருகே தீ வைத்து கொளுத்த படுவதாகவும் இதன் காரணமாக இந்த நச்சு புகையானது அருகில் நோயாளிகள் இருந்துவரும் கட்டிடத்திற்குள் புகுந்து நோயாளிகளை தாக்கி வருவதாக குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், தற்போது இதுபோன்று ஆட்கொல்லி நோயான கொரோனாவிற்கு பயன்படுத்தப்பட்ட கவச உடைகள், முகக் கவசங்கள் என அனைத்தும் உரிய பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படாமல் இதுபோன்று வெட்டவெளியில் வீசப்பட்டுள்ளதால் நோய்த்தொற்று பரவுவதற்கு முன்பாக உடனே அகற்றுவதற்கு மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், நோயாளிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Thiruvarur Government Hospital , Armor used for Corona at Thiruvarur Government Hospital lying in rubbish: People fear disease outbreak
× RELATED ₹13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற...