×

நகரில் மந்த கதியில் மேம்பால பணிகள்: திணறும் வாகன ஓட்டிகள்; தவிக்கும் மக்கள்

கோவை: கோவை மாநகரில் மந்த கதியில் மேம்பால பணிகள் நடந்து வருவதால் வாகன ஒட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். இப்பணி எப்ேபாது முடியும்? என மக்கள் தவிக்கின்றனர். கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது. முதல்கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

உக்கடம் - கரும்புக்கடை வரை 55 தாங்கு தூண்கள் (பில்லர்) அமைக்கப்பட்டு, அதில் ஓடுதளம் அமைக்கும் பணி பெரும்பகுதி முடிவடைந்து விட்டது. தற்போது, உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகள் நடக்கிறது. இதற்காக, இப்பகுதியில் தாங்கு தூண்கள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. உக்கடம்-கரும்புக்கடை இடையே முதல்கட்ட மேம்பால பணிகள் 65 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 6 மாத காலத்திற்குள் முதல்கட்ட மேம்பால பணிகள் முற்றிலும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் கரும்புக்கடை-ஆத்துப்பாலம் வரை இன்னமும் துவக்கவில்லை. மந்த கதியில் நடக்கும் உக்கடம் மேம்பால பணிகள் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் முதல்கட்ட மேம்பால பணிகள்கூட முடியவில்லை. இப்படியிருக்க, இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் எப்போது முடியும் என தெரியவில்லை. ஏற்கனவே போக்குவரத்து மாற்றம் காரணமாக மக்கள் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அவசர தேவைகளுக்குகூட செல்ல முடியவில்லை. கட்டுமானம் காரணமாக ஏற்படும் காற்று மாசு, உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன. இந்த மேம்பால பணிகளை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஊடரங்கு காரணமாக உக்கடம் மேம்பால பணிகள் சற்று பாதிக்கப்பட்டது. தற்போது மிகவும் விறுவிறுப்பாக பணிகள் நடந்து வருகிறது’’ என்றார்.

கோவை திருச்சி சாலையில், ரூ.253 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த வருடம் துவங்கியது. திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகில் இருந்து துவங்கும் இந்த மேம்பாலம், ராமநாதபுரம் பங்கு சந்தை அலுவலகம் அருகே நிறைவடைகிறது. மொத்தம் 3.1 கி.மீ. தூரத்துக்கு 112 தூண்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் இருந்து உக்கடத்துக்கு செல்லும் வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக சுங்கத்தில் 400 மீட்டர் தூரத்துக்கு 8 தூண்களுடன் இறங்குதளம் பாலம் அமைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த மேம்பால பணிகள் படு விறுவிறுப்பாக நடந்தது. ஆனால், தற்போது மந்த கதியில் நடக்கிறது. தென் மாவட்டங்களில் இருந்து வருவோர் மாநகர் பகுதிக்கு வருவதற்கு இச்சாலை வழியாக வரவேண்டியுள்ளதால், மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.

கோவை கணபதியில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் ரயில்வே கிராசிங் உள்ளது. தினமும் இவ்வழியாக 40க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வந்ததால் அடிக்கடி அப்பகுதியில் ரயில்வே கேட் திறந்து, மூடப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, இங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. இந்த மேம்பாலம் 550 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் கொண்டது. சுமார் ரூ.20 கோடி செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், மேம்பாலம் கீழ் பகுதியில் அணுகு சாலை (சர்வீஸ் ரோடு) அமைக்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது.

இதனால், இந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் நிலுவையில் உள்ளது. இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், கணபதி, சரவணம்பட்டியில் இருந்து வரும் வாகனங்கள் காந்திபுரம் செல்லாமல், மிக எளிதாக அவினாசி சாலையை சென்றடைய  முடியும். இதன்மூலம், காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இப்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் புதுப்பிக்கப்படாமல்  பழுதடைந்து கிடக்கிறது. இப்பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். அத்துடன், மின் கம்பிகள் சிலவற்றை அகற்ற வேண்டியுள்ளது. இப்பணியை மின்வாரியம் செய்ய வேண்டும். இத்துறையினர், தங்களது பணியை விரைவாக செய்து  முடித்தால், அணுகு சாலை அமைப்பதில் சிக்கல் இருக்காது. மேம்பாலம் விரைவில்  மக்கள் பயன்பாட்டுக்கு வரும்’’ என்றார்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டம் வரை சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில் 29 தூண்களுடன் உயர்மட்ட மேட்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல், ஜி.என். மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில் 15 துாண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது. இதற்காக ரூ.108 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளும் படு மந்தமாக நடக்கிறது. அதனால், இச்சாலையில், மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.23 கோடி மதிப்பில் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றது. தற்போது 99 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன.

ஆனால், அணுகு சாலைக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தாமல் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாலம் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது. இதன் காரணமாக நீலிக்கோணாம்பாளையம், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திக் கூறுகையில், ‘‘எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு உடனே திறந்துவிட வேண்டும். மாநகரில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் அனைத்தையும் விரைவாக முடிக்கவேண்டும். இல்லையேல், மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

மூன்று இறங்குதளம்
உக்கடம்-ஆத்துப்பாலம்  மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் வசதிக்காகவும், மேம்பாலத்தில் போக்குவரத்து  நெரிசலை தவிர்க்கவும் மூன்று இடங்களில் இறங்குதளங்கள் அமைக்கப்பட உள்ளன.  போத்தனூர் பிரிவு, ஆத்துப்பாலம், உக்கடம் பேருந்துநிலையம் ஆகிய மூன்று  பகுதிகளில் யூ வடிவிலான ஏறுதளம் மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன.  பொள்ளாச்சியில் இருந்து வரும் வாகனங்கள் போத்தனூர் பிரிவு இறங்குதளத்தை  பயன்படுத்தி டவுன்ஹால் செல்லலாம். உக்கடம் பேருந்து நிலையம் இறங்குதளம்  மூலம் சுங்கம் பைபாஸ் செல்லலாம். ஆத்துபாலம் இறங்குதளம் மூலம் பாலக்காடு  சாலை செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாய பணி பாதிப்பு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறுகையில், ‘‘நகரில் மந்த கதியில் நடைபெறும் மேம்பால பணிகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உரிய நேரத்தில் கொண்டு செல்ல முடியவில்லை. கால்நடை தீவனங்கள் வருவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. தமிழக அரசு முழு முயற்சி எடுத்து, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : recession ,city ,motorists , Overwork in recession in the city: choking motorists; Suffering people
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு