×

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலையில் போதை கும்பல் பிடியில் சிக்கி தவிக்கும் ஏழை மாணவர்கள்: குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் தடம் மாறும் வாழ்க்கை

வேலூர்: மனித சமுதாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளவில் எழுந்திருக்கும் மிகப்பெரிய பிரச்சனை போதைப்பொருட்கள். போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என அனைத்து வகைகளிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மிதமிஞ்சிய போதையினால் பல குற்றச்செயல்கள் அரங்கேறி வருகிறது. இந்தி, கன்னட திரையுலகத்தினர் போதை பொருட்கள் பயன்படுத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை பொருட்கள் வழக்கில் கன்னட நடிகைகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்தி திரையுலகில் பிரபல நடிகைகளிடம் போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தை பொருத்தவரை கள்ளு, சாராயம், விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற ஐஎம்எப்எல் சரக்குகள் விற்பனை களைகட்டி வந்தது. தற்போது கஞ்சா, அபின் போன்றவை அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸ்ட்லி மது வகைகளும், ஹெராயின், பிரவுன் சுகர், கோக்கைன் போன்றவைகளும் இப்போது சர்வசாதாரணமாக பயன்படுத்தி வருகின்றனர். சிறிது சிறிதாக போதைப்பழக்கமானது அதிகரித்துள்ள நிலையில் அதனை பயன்படுத்துவோர் திருடுதல், பொய் பேசுதல், கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்றசம்பவங்களை துணிந்து செய்யத்தொடங்கியுள்ளனர். போதையின் பிடியில் அகப்பட்டவர்கள் பாலியல் குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல், இளைஞர்களையும், ஏழை மாணவர்களையும் குறிவைத்து விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக தமிழக- ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டத்திற்கு, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சிறு, சிறு பொட்டலங்களில் அடைத்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர். போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள், பள்ளிப்படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டு, தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடத்ெதாடங்கி விடுகின்றனர்.

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள மலைகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலையில் விழிப்புணர்வு நடத்த சென்ற போலீசார் மீது கல்வீசி தாக்கியதில் போலீசார் படுகாயமடைந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் 10க்கும் மேற்பட்ட கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாநகரின் உள்ள மலை அடிவாரங்களில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது. குறிப்பாக 15 வயது முதல் 25 வயதுக்குப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் போதையில் ஏற்பட்ட தகராறில் கடந்த 3 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறியுள்ளது. அதோடு, செயின் பறிப்பு, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து, தங்களுக்கு தேவையான போதை பொருட்களை வாங்கி வருகின்றனர். சிறுவயதில் போதை பொருட்களுக்கு அடிமையாகி பெரும்பாலான மாணவர்களின் வாழ்க்ைக தடம் மாறியுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்வதால், பெங்களூரில் இருந்து தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்காவை கடத்தி கொண்டு சென்னைக்கு எடுத்து செல்லும் போது,

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் போலீசார் நடத்தும் சோதனையின் போது, குட்கா பறிமுதல் செய்யப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில், பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக கஞ்சா பயிர் வளர்க்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய ரகசிய ரெய்டில் தம்பதி உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதா என்று போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி போதை பொருட்களை தடை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்ட போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி ராமசந்திரன் கூறியதாவது: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் போதை பொருட்கள் குறித்து அடிக்கடி சோதனை செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்கிறோம். இந்தாண்டு 4 மாவட்டங்களில் 34 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதார்களான தாமோதரன், ராமு ஆகிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 இடங்களில் பயிரிட்டிருந்த கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டது. திருப்பத்தூரில் 271 கிலோ கஞ்சா, ஆலப்புழா எக்ஸ்பிரஸில் 55.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் போதை பொருட்கள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

மாநகரில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்
வேலூர் மாநகரில் வேலூர் வடக்கு, தெற்கு, சத்துவாச்சாரி, பாகாயம், பள்ளிகொண்டா, காட்பாடி ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. இதில் வேலூர் தெற்கு சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, சத்துவாச்சாரி, பாகாயம், பள்ளிகொண்டா ஆகிய 5 காவல் நிலையங்களில் பெண் இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். மாநகரின் முக்கிய காவல் நிலையங்களில் பெண் இன்ஸ்பெக்டர்களாக இருப்பதால், அந்த காவல் நிலையங்களுக்கு எல்லைக்குபட்ட பகுதிகளில் கட்ட பஞ்சாயத்து, ரவுடிசம், வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களுடன் கொலைகளும் அதிகரித்துள்ளது. குறிப்பாக போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. பெண் இன்ஸ்பெக்டர்கள் என்பதால், குற்றவாளிகள் போலீஸ் என்ற பயமின்றி சுதந்திரமாக குற்றச்செயலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. எனவே போலீஸ் ரோந்து பணியை அதிகரித்து சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சாராய வழக்கில் 108 பேர் கைது
திருவண்ணாமலை எஸ்பி அரவிந்த் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை முற்றியிலும் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 7ம் தேதி ஆரணி, போளூர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடைய 108 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்
போதை பொருட்கள் பயன்பாடு குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘வீட்டில் பெரியவர்கள், இளம் பருவத்தினரிடம், நேரம் ஒதுக்கி அவர்களுடன் பழக வேண்டும். அவர்கள் தீய பழகத்திற்கு அடிமையாகி இருந்தாலும், அவர்களை மீட்க முடியும். போதை பொருட்கள் குறித்து போதிய அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதோடு, போதை பொருட்கள் கடத்தலை தடுக்க அதிரடி சோதனை நடத்த வேண்டும். அதில் தொடர்புடையவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

வாட்ஸ்ஆப்பில் பதிவு செய்தால் டோர்டெலிவரி
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா பயன்படுத்தும் இளைஞர்களுக்கு தனியாக வாட்ஸ்ஆப் குழு உள்ளது. இந்த குழுவில் புரோக்கர்கள் தான் அட்மின். அவர்கள், தங்களுடைய கஸ்டமர்களை மட்டும் குழுவில் இணைத்துக் கொள்கின்றனர். அந்த குழுவில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விலை பதிவு செய்கின்றனர். குழுவினர் தேவையான போதை பொருட்களுக்கு மெசேஜ் செய்தால் அவர்களுக்கு உடனடியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் டோர்டெலிவரி செய்யப்படுகிறது.

குட்கா கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு
இதுகுறித்து வேலூர் மாவட்ட எஸ்பி செல்வகுமார் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா வழக்கில் தொடர்புடைய நபர்களை கண்காணித்து வருகிறோம். கடந்த ஒரு மாதத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்னளர். ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் இருந்து வேலூர் வழியாக குட்கா கடத்தலை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருகிறோம். போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால், ரகசியமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

கஞ்சா கடத்தலை தடுக்க எல்லைகளில் பாதுகாப்பு
திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் கூறியதாவது: போதை பொருளை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆந்திர எல்லையில் உள்ளதால் அங்கிருந்து ரயில்கள் மற்றும் பஸ்கள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை கடத்தி வந்தனர். தற்போது அது முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை கஞ்சா வழக்கில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் 4 பேர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜவ்வாது மலை மற்றும் மாத கடப்பா மலைகளில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனையை கண்காணிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் உட்பட பலரை கைது செய்துள்ளோம். இவ்வாறு கூறினார்.

கள்ளச்சாராய விற்பனை குறைந்தது
ராணிப்பேட்டை எஸ்பி மயில்வாகனிடம் கேட்டபோது, ‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 சதவீதம் பேர் கஞ்சா பயன்படுத்தி வருகின்றனர். இன்றைய தேதி கஞ்சா விற்பனை மற்றும் பயன்படுத்தியதாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்னர். ஆந்திர மாநிலம் மற்றும் திருவள்ளூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து ராணிப்பேட்டையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதை தடுக்க தணிப்படை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். ேமலும் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவதும், விற்பனை செய்வதும் முற்றியிலும் குறைந்துள்ளது. இதேபோல், கஞ்சா பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.


Tags : Tirupati ,Vellore ,Ranipettai ,Thiruvannamalai , Poor students caught in drug gangs in Vellore, Ranipettai, Tirupati and Thiruvannamalai: Life changing course due to involvement in crime
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...