×

அடுத்தடுத்து நடைபெறும் உயிரிழப்புகள்; மணல் மூடிய தேங்காப்பட்டணம் துறைமுகம்: நிரந்தர தீர்வு கிடைக்குமா?

புதுக்கடை: கன்னியாகுமரி  மாவட்டம் இயற்கையாகவே ஆழ்கடலில் மீன்பிடிக்க திறமை வாய்ந்த மீனவர்களை கொண்ட மாவட்டம். ஆனால் இங்கு மீன் பிடிக்க வசதியாக மீன்பிடி துறைமுகங்களோ, படகு அணையும் தளங்களோ இல்லாமல் மீனவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் குமரி மீனவர்கள் கேரளா உட்பட பல பகுதிகளுக்கும்  மீன் பிடிக்க சென்று வந்தனர். இதனால் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக குமரி மீனவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியதுடன்,   உயிர், உடமைகளை இழந்து வந்தனர். இதனால் குமரி மாவட்டத்தில், இயற்கையாகவே துறைமுகம் அமைப்பதற்கான வசதி உள்ள தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறை முகம் அமைக்க வேண்டும் என்று 50 ஆண்டு காலமாக மீனவர்கள்  கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் கடந்த 2006ம் ஆண்டு குறும்பனை முதல் நீரோடி வரையிலான மீனவர்கள் பயன்படும் வகையில் ரூ.31 கோடியில் மீன்பிடி துறை முகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து அந்த  திட்டம்  கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் பலனாக 2007ம் ஆண்டு துறைமுகத்திற்கான நில ஆர்ஜிதம் செய்யும் பணி துவங்கியது. 2010ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில்  ரூ.40  கோடி மதிப்பில் தேங்காபட்டணத்தில் துறைமுக பணிகள் ஆரம்பித்தது. இந்த பகுதியில் அலையின் வேகம் இயல்பாகவே அதிகமாக இருப்பதால், அலை தடுப்பு சுவர்கள் சேதம் அடையாத வகையில், பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து கோர் - லாக் கட்டைகள் அடுக்கப்பட்டது.

தற்போது சுமார் 105 கோடி மதிப்பில்  இந்த துறைமுகம் உருவாக்கப்பட்டு உள்ளது. தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தற்போது இனயம் மற்றும் தூத்தூர் மண்டல மீனவர்கள் நூற்றுக்கணக்கான படகுகளில் மீன்பிடித்து வருகின்றனர். பலகோடி மதிப்பில்  உயர் ரக வகை மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இருப்பினும் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் அலையின் வேகத்தால் மணல் திட்டுகள் ஏற்படுவதால், மீன்பிடி தொழிலுக்கு இடையூறு ஏற்படுவதுடன் பல  நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தேங்காப்பட்டணம் கடற்கரை கடல் அலையின் வேகம் அதிகமான பகுதியாகும். குறிப்பாக ஜூன், ஜூலை மாதங்களில் கடல்  சீற்றத்தால் இந்த பகுதி அதிக அளவில் பாதிப்பு அடைவதுண்டு.

அந்த கால கட்டங்களில் துறைமுகத்தின் முகத்துவார பகுதியில் இயற்கையாகவே பெரும் மணல் திட்டுகள் ஏற்படுகிறது. இதனால் மீனவர்களின் படகுகள் துறை முகத்தின் உள்ளே செல்ல முடியாமலும், வெளியே வர முடியாமலும் அவதி  படும் நிலை ஏற்படும். குறிப்பாக துறை முகத்தில் படகு அணையும் பகுதியில் குறைந்தது 4 முதல் 5 மீட்டர் ஆழம் இருந்தால்தான் படகுகள் உள்ளே வந்து செல்ல முடியும். ஆனால் தேங்காப்பட்டணத்தில் படகுகள் உள்ளே  சென்றால் தரை  தட்டுவதாக புகார் உள்ளது. தற்போது 625 மீட்டர் நீளத்தில் அமைத்துள்ள பிரதான அலை தடுப்பது  சுவரை மேலும் 250  மீட்டர் விரிவுபடுத்தவேண்டும். அப்பொழுது இந்த மணல் குவியல் ஏற்படும் வாய்ப்பு  தடுக்கப்படும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த பணிகள் செய்யாமல் தாமதம் ஏற்படுவதால்தான் பல நேரங்களில் தேங்காப்பட்டணத்தில் பல உயிரழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த ஜூன் ஜூலை மாதங்களில் மட்டும் மணல் திட்டுகளில் சிக்கி படகு கவிழ்ந்ததில், தொடர்ச்சியாக 2 பேர் கடலில் மாயமான சம்பவம் நடந்தது. எனவே தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி நுழைவு வாயில் பகுதியில் உள்ள மணல் திட்டுகளை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிர்பலிகள் நடக்காமல் தடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை  வைத்து பல்வேறு போராட்டங்கள்  நடத்தப்பட்டது.

இதன் எதிரொலியாக தற்போது அரசு சார்பில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் டிரஜ்ஜர் என்ற மணல் உறிஞ்சு இயந்திரம் மூலம் மணல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை துறைமுக நுழைவுவாயில் பகுதியில்  நிறுத்தி மணல் உறிஞ்சும் பணிகள் நடந்துவருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, டிரஜ்ஜர் இயந்திரம் மூலம் மணல் உறிஞ்சும் பணி துவக்கப்பட்டுள்ளது. எந்த  தடைகளோ, இடையூறுகளோ ஏற்படாவிட்டால் சரியாக 2 மாதத்தில் இந்த பகுதியில் உள்ள மணல் திட்டுகள் அகற்றி முடிக்கப்படும் என தெரிவித்தனர்.

மணல் உறிஞ்சு இயந்திரம் மூலம் அகற்றுவது  நிரந்தரமல்ல
தேங்காப்பட்டணம் துறைமுக பைபர் படகு மீன்பிடி தொழிலாளர் சங்க ஆலோசகர் முனைவர் ஜோர்தான் கூறியதாவது: முறையான திட்டமிடுதல் இல்லாமல் பணி செய்ததால் தான் துறைமுகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது என பொதுமக்கள் தரப்பில் புகார் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் தற்போதைய சூழலை விட பெரிய அளவில் மணல் குவியல் ஏற்பட்டது. அப்போது மணல் குவியலை அகற்ற பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம்  போடப்பட்டு, 11 கோடி  ரூபாய்  நிதி ஒதுக்கப்பட்டது. அதில் முழுமையாக மணல் அகற்றப்படவிலை என்ற புகார் எழுந்தது. அதன் பிறகு 2016ல் மீண்டும் 2 கோடி  ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

அப்போது துறைமுகத்தை பார்வையிட வந்த உயர் அதிகாரி ஒருவர் 8 கோடி ரூபாய் மதிப்பில் இந்த மீன்பிடி துறைமுகத்திற்கு நிரந்தர இயந்திரம் வாங்க முடியும் என குறிப்பிட்டார். தற்போது மீண்டும் மணல் அகற்ற அரசு ஒரு கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த அதிகாரி குறிப்பிட்ட வகையில் நிரந்தரமாக 2 இயந்திரங்கள் வாங்கும் அளவில் நிதி இப்போதே செலவாகியுள்ளது. எனவே அரசு தேங்காப்பட்டணம் துறைமுகத்தை புனரமைக்க வேண்டும். அலை  தடுப்பு சுவர் விரிவு படுத்த வேண்டும். தேவை என்றால் நிரந்தர மணல் உறிஞ்சும் இயந்திரம் நிறுவ வேண்டும். மீனவர்களின் உயிர் பலிகளை தடுக்க வேண்டும் என கூறினார்.

Tags : Sand , Successive casualties; Sand-covered Tenkapatnam Port: Is there a permanent solution?
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்