ஆராய்ச்சி மாணவர் கண்டுபிடிப்பு; உழக்குடியில் மன்னர் கால நினைவுச்சின்னங்கள்: தொல்பொருள் துறை ஆய்வு நடத்துமா?

நெல்லை: உழக்குடி யில் மன்னர்கள், போர்வீரர்கள் புதைக்கப்பட்டு இருப்பதற்கான பெருங்கற்கால நினைவுச் சின்னங்களான குத்துக்கல், கற்குவை மற்றும் முதுமக்கள்தாழி உள்ளிட்ட பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு தொல்பொருள் துறை ஆய்வு நடத்துமா? என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அடுத்துள்ள சிவகளை பகுதிகளில் தொல்லியல் துறையினர் சார்பில் சமீபத்தில் அகழாய்வு பணி நடந்தது. வரலாற்று ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியா  என்பவர் 1899 முதல் 1904ம் ஆண்டுகளில் தாமிரபரணி ஆற்றங்கரைகளில் உள்ள  ஆதிச்சநல்லூர், வடக்கு வல்லநாடு, வல்லநாடு ராஜவல்லிபுரம் பரம்பு, கிருஷ்ணாபுரம் பரம்பு, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட 37 இடங்களில் அகழாய்வுகளை நடத்தினார்.

இந்த இடங்களில் பழங்கால  தமிழர்கள் சிறிய கிராமங்கள் என்ற அளவில் வாழ்ந்திருக்கலாம் என்றும், ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் வணிகப்  பண்பாட்டுடன் பெரிய நகர்போல அமைத்து வாழ்ந்திருக்க  வேண்டும் என்றும் அவரது ஆய்வுகளின் மூலம் தெரிய வந்தது. தற்போது தூத்துக்குடி வஉசி கல்லூரியின் வரலாற்றுத் துறை முனைவர் சசிகலா வழிகாட்டுதலில், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் ஆறுமுகமாசான சுடலை களஆய்வு மூலமாக இதுவரை யாரும் கண்டுபிடிக்காத உழக்குடி, கலியாவூர், சீவலப்பேரி ஆகிய 3 புதிய தொல்லியல் அகழாய்வுக் களங்களை கண்டுபிடித்துள்ளார். இந்த 3 இடங்களும் வரலாற்று ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியா, ஏற்கனவே கண்டறிந்த 37 இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கள ஆய்வுகள் குறித்து ஆறுமுகமாசான சுடலை கூறியதாவது: உழக்குடியில் இருந்து கலியாவூர் செல்லும் சாலையோரமாக மேற்கொண்ட முதல் கள ஆய்வில் பல நிறங்களில் மட்பாண்டங்கள், பரிமனை, தண்ணீர் வடிகட்டி, வட்டச் சில்லுகள் மற்றும் உடைந்த நிலையில் முதுமக்கள் தாழி கிடைத்தது. இந்த பொருட்கள் ஆதிச்சநல்லூர், கீழடி பகுதிகளில் கிடைத்த தொல்பொருட்களைப் போன்று இருந்தன. கலியாவூரைத் தொடர்ந்து அடுத்தகட்ட கள ஆய்வினை உழக்குடி, சீவலப்பேரி பகுதிகளில் மேற்கொண்டபோது அங்கே முதுமக்கள்தாழி, குத்துக்கல், கற்குவை உள்ளிட்ட பல தொல்பொருட்கள் கிடைத்தது. இங்குள்ள குத்துக்கல் அல்லது நெடுங்கல் என்பது ெபருங்கற்கால நினைவுச் சின்னங்களில் முக்கியமான ஒன்று.

இக்கல் முற்காலத்தில் வாழ்ந்து இறந்த அரசர்கள், போர் படைத் தளபதிகள், போர் வீரர்கள் போன்றோரின் நினைவாக நடப்பட்டன. உழக்குடியில் 13 அடிக்கு  மேல் ஒரு குத்துக்கல்லும், சீவலப்பேரியில் 1.5 அடியிலிருந்து 5 அடிக்கு  மேல் உயரமுள்ள 12க்கும் மேற்பட்ட குத்துக்கல்களும் உள்ளன. இந்தக் கல்  இருக்கும் திசையிலிருந்து கிழக்கு அல்லது வடக்கு திசையில் மக்களின்  வாழ்விடப் பகுதியானது இருக்கும். உழக்குடி கிராமம் தூத்துக்குடியிலிருந்து 38 கி.மீ. தொலைவிலும், நெல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த ஊரில் உழக்குடி குளம், சம்பா குளம் என்ற 2 குளங்கள் உள்ளன. உழக்குடி குளத்திற்கு அருகில் தென்மேற்கு திசையில் களியங்காடு பகுதியில் குத்துக்கல், கற்குவை, கோப்பைகள், முதுமக்கள்தாழி மற்றும் இரும்புப் படிமங்களும் உள்ளன.

உழக்குடியில் முதுமக்கள் தாழியைக் கண்டுபிடித்தது இதுவே முதல்முறை. முதுமக்கள் தாழி இருப்பதால் இப்பகுதியில் கிமு 1000 முதல் 300 வரையிலான காலக் கட்டங்களில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இறந்தவர்களுடைய உடலை எரிக்கின்ற வழக்கம், பழங்காலத்தில் தமிழர்களிடையே கிடையாது. பழந்தமிழர்கள் இறந்தவர்களை புதைப்பதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில், உடலைப் புதைத்து வணங்கினர். இந்த இடமானது ஊருக்கு வெளியே குறிப்பாக ஊரின் தெற்கு, மேற்கு திசைகளிலும், ஆற்றங்கரையிலும், விவசாயத்திற்குப் பயன்படாத சரள் கற்கள் நிரம்பிய குன்றுப் பகுதியிலும் இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியா தெரிவித்துள்ளார். உழக்குடியில் நான் கண்டுபிடித்துள்ள தொல் பொருட்களை தொல்லியல் துறையினர் பார்வையிட்டு அடையாளமிட்டுச் சென்றுள்ளனர்.

எனவே உழக்குடி, கலியாவூர், சீவலப்பேரி ஆகிய இந்த 3 இடங்களிலும் தொல்லியல்துறை சார்பில் அகழாய்வுகள் மேற்கொள்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொன்மைமிக்க வரலாற்றை வெளிக்கொண்டு வர முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெருங்கற்கால நினைவு சின்னங்கள்

பெருங்கற்கால நினைவுச் சின்னங்களான கற்குவை, பல்லாங்குழி ஆகியவையும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உழக்குடி எல்லைக்குள் இரண்டு கற்குவைகள், சீவலப்பேரி எல்லைக்குள் உள்ள குன்றுப் பகுதியின் தென்பகுதி முழுவதும் 20க்கும் மேற்பட்ட கற்குவைகள் உள்ளன. முன்னோர்கள் பாறைகளின் ேமற்பரப்பில் குழிகள் அமைத்து பல்லாங்குழி விளையாடப் பயன்படுத்தினார்கள். உழக்குடியில் உள்ள குன்றிலிருந்து தென்மேற்கு திசையில் களஆய்வு செய்த போது அங்கிருந்த பாறையில் பல்லாங்குழி இருந்தது. இதில் மொத்தம் 14 குழிகள் உள்ளன.

உழக்குடியில் உள்ள குன்றுப் பகுதியின் மேற்கு திசையில் களஆய்வு செய்தபோது, பாறையின் மேற்பரப்பில் ஒருவிதமான குழிகள் இருப்பது தென்பட்டது. அக்குழிகள் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கோப்பைகள் என்பதை உறுதி செய்தேன். இவ்வாறு கிடைமட்ட பாறைகளில் உள்ள இந்த கோப்பைகளை சில வகையான பொருட்களை அரைப்பதற்கு ஆட்டுக்கல்லுக்கு பதிலாக  பயன்படுத்தி இருக்கலாம் என்றும் ஆறுமுகமாசான சுடலை கூறினார்.

Related Stories:

More