×

TNPSC தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 6 பேரை கைது செய்தது சிபிசிஐடி: வழக்கு கிடப்பில் உள்ளதாக புகார் எழுந்ததால் நடவடிக்கை ..!!

சென்னை: TNPSC தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய நபர்கள் முதல் 100 இடங்களில் 40-க்கும் அதிகமானோர் முன்னிலை பெற்றனர். அதனைத்தொடர்ந்து முறைகேடுகளில் தொடர்புடைய தரகர் ஜெயக்குமார் TNPSC அலுவலக உதவியாளர் ஓம் காந்தன் உள்ளிட்ட 47 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு மட்டுமல்லாது  2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 ஏ தேர்வு 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஒ தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 47  நபர்களும் வி.ஏ.ஓ, குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய மூன்று தேர்வுகளிலும் நடைபெற்ற முறைகேடுகளோடு தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் வரை பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரம் கொரோனா காரணமாக அமைதியாகி போனது.

இதனையடுத்து, மீண்டும் விஸ்வரூபம் எடுத்த இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார்,  அரசு அதிகாரிகள் உள்பட 6 பேரை கைது செய்து விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் இதற்கு முன்னர் இடைத்தரகர் ஜெயக்குமார், அரசு ஊழியர்கள் என இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு கிடப்பில் கிடப்பதாக புகார் எழுந்ததால் 15 நாட்களில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிபிசிஐடி தகவல் அளித்துள்ளது.


Tags : TNPSC , TNPSC, abuse, CBCID
× RELATED 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான...