×

சோழர் ஆட்சி காலத்தில் துறைமுக நகரமாக விளங்கிய நாகை மீண்டும் பொலிவு பெறுமா?... கிடப்பில் கிடக்கும் மக்களின் நீண்ட நாளான கனவு திட்டம்

நாகை: சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் முக்கிய துறைமுக நகரமாக விளங்கியது நாகை மாவட்டம். அலங்கார பொருள்கள், கைவினை பொருள்கள் மற்றும் வாசனை திரவியங்களை தென் இந்தியாவிலிருந்து அயல்நாடுகளுக்கு அனுப்பும் முக்கிய ஏற்றுமதித் தளமாகவும், முக்கிய இறக்குமதி தளமாகவும் இந்த துறைமுகம் விளங்கியது. பன்னாட்டு சரக்குப் போக்குவரத்து மட்டும் இல்லாமல் பயணிகள் கப்பல் போக்குவரத்திலும் நாகை துறைமுகம் கோலோச்சியது என்று கூறலாம். இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்றிருந்தது முந்தைய காலங்களில் பரபரப்பாக இயங்கிய நாகை துறைமுகம் கடந்த 1980ம் ஆண்டுகளுக்கு பின் தன் செல்வாக்கை படிப்படியாக இழந்தது.

ரோனா, ரஜூலா, ஸ்டேட் ஆப் மெட்ராஸ் ஆகிய கப்பல்களின் நாகை வருகை படிப்படியாக குறைத்து கொண்டது. பின்னர் அந்தக் கப்பல்கள் தங்கள் வருகையை முழுமையாக நிறுத்திக் கொண்டன. எம்.வி. சிதம்பரம் கப்பல் மட்டும் நாகைக்கு வந்து சென்றது. 1984ம் ஆண்டில் மலேசியாவிலிருந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்த எம்.வி. சிதம்பரம் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த கப்பலும் நாகை சேவையை நிறுத்தி கொண்டது. பின்னர் வெங்காய ஏற்றுமதியை மையமாக கொண்டு நாகை துறைமுகத்திலிருந்து சரக்கு கப்பல் போக்குவரத்து தொடர்ந்து வந்தது. பினாங்கு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களுக்கு வெங்காய ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்று வந்தது. 1991ம் ஆண்டில் போர்ட்கிளாங் துறைமுகம் கண்டெய்னர் துறைமுகமாக மாற்றப்பட்டு மலேசியாவின் பிரதான துறைமுகமாக மேம்படுத்தப்பட்டது.

அப்போது, நாகை துறைமுகத்தில் கண்டெய்னர் கையாளும் வசதி இல்லாத காரணத்தால் வெங்காய ஏற்றுமதியும் தடைபட்டது. 1991ம் ஆண்டு செப்டம்பர் 16ம்தேதி நாகையிலிருந்து எம்.வி. டைபா என்ற கப்பல் மூலம் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டதே நாகை துறைமுகத்திலிருந்து நடைபெற்ற கடைசி ஏற்றுமதியானது. பின்னர் 1999ம் ஆண்டிலிருந்து நாகை துறைமுகம் வழியே பாமாயில் மற்றும் தேங்காய் புண்ணாக்கு இறக்குமதி நடைபெற்றது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 13 சிறுதுறைமுகங்களில் ஓரளவு செயல்பாடும், லாபமும் கொண்ட துறைமுகங்களின் பட்டியலில் நாகை இடம் பெற்றது. இருப்பினும், போதுமான வளர்ச்சி நடவடிக்கைகள் இல்லாததாலும் நாகைக்கு அருகே காரைக்கால் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டதாலும், நாகை துறைமுகம் தனது விறுவிறுப்பான செயல்பாடுகளை இழக்க தொடங்கியது.

இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதியாகும் பாமாயில் மட்டுமே தற்போது இத்துறைமுகத்தை இயங்க செய்து வருகிறது. இதுவும் கடந்த சில மாத காலமாக தடைபட்டுள்ளது. நாகை துறைமுகத்தின் பழம் பெருமை மீட்டெடுக்க வேண்டும், துறைமுக வளர்ச்சி மட்டுமே பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாகைக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். நாகை துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர் நாகூர் சித்திக் கூறியதாவது: சுனாமிக்கு பின்னர் நாகை மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது. ஏழை, எளிய மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்கள், மீனவர்கள் மற்றும் ஏனைய மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய நாகை துறைமுகத்தை மீண்டும் இயங்க செய்ய வேண்டும்.

நாகை மாவட்டம் பீச்ரோட்டில் உள்ள துறைமுகம் கேட்பாரற்று உள்ளது. கடந்த 1978ம் ஆண்டு முதல் இந்த துறை முகத்தில் பாடாரஜீவா, வஉசி ஆ.ஏ, சிதம்பரம், ஸ்டேட்ஆப்மதுராஸ் என்ற பாசஞ்சர்கப்பல்கள் சிங்கப்பூர் இலங்கை நாடுகளுக்கு சென்று வந்துள்ளது. வெங்காயம், புண்ணாக்கு, பாமாயில், சிமெண்ட், உரம், இரும்பு கம்பிகள் ஆகியவற்றை இறக்குமதி, ஏற்றுமதி செய்யும் துறைமுகமாகவும் இருந்து வந்தது. தற்பொழுது இந்த துறைமுகம் இயங்காமல் போய்விட்டது.
மீண்டும் இந்த துறைமுகத்தை இயங்க செய்ய மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், நெல்லுக்கடைமரியம்மன்கோயில், சிக்கல் சிங்காரவடிவேலர் சன்னதி என்று ஆன்மீக பூமியாக நாகை விளங்கி வருகிறது. சர்வமத மக்கள் உலக அளவில் இருந்து நாகை வந்து பயன்பெற மீண்டும் நாகை துறைமுகத்தை செயல்பட செய்ய வேண்டும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்த நாகை துறைமுகத்தை மீண்டும் பொலிவு பெற செய்ய வேண்டும் என்றார். தேசிய மீனவர் பேரவை துணைத்தலைவர் குமரவேல் கூறியதாவது: 2000 ஆண்டுகள் பழமைமிகு சோழப்பேரரசின் துறைமுகமாக நாகை துறைமுகம் விளங்கியது. நாவல்பட்டிணம், சத்திரியசிகாமணி, சோழகுலவல்லிப்பட்டினம் என இந்த துறைமுகம் அழைக்கப்பட்டது. ராஜேந்திரசோழனின் அனைத்து கடற்பயணங்களும் நாகை துறைமுகம் வழியாகவே நடந்தது. இந்த துறைமுகம் போர்ச்சுகீசியர்களின் முதன்மை துறைமுகமாக விளங்கியது. 1660 லிருந்து 1781 வரை இந்த துறைமுகத்தை டச்சுகாரர்கள் பயன்படுத்தினர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இலங்கைக்கு அரிசி, சுருட்டு, புகையிலை, தோல் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டது.

கீழை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர்,பர்மா, சீனா, இந்தோனேஷியா, சுமத்ரா, ஜாவா போன்ற நாடுகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் நாகை வந்து வணிபம் செய்துள்ளனர். 1568ல் துறைமுக அலுவலகமும், சுங்க அலுவலகமும் செயல்பாட்டில் இருந்தது. அதே ஆண்டில் பிஐ என்ற ஆங்கில கப்பல் கம்பெனி தொடங்கப்பட்டு சென்னை, பினாங்கு, சிங்கப்பூருக்கு பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை சிறப்பாக நடத்தியது. இதற்காக நாகையில் கலங்கரை விளக்கம் கடந்த 1869ல் கட்டப்பட்டது. இன்றைய நவீன துறைமுகத்திற்கான வணிக துறைமுக வளாகம் மற்றும் கப்பல்துறைக்கான கட்டமைப்புகள் அப்படியே உள்ளது. நாகையில் கடலில் பணியாற்றக்கூடிய மனிதவளம் அதிகமாகவே உள்ளது. எனவே பழமையை மீட்டெடுக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

நீண்ட நாள் கனவு நிறைவேறுமா?
கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நாகை வந்த முதல்வரிடம் மீண்டும் நாகைக்கு துறைமுகம் வர வாய்ப்புள்ளதா என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசைப்படி நாகையில் பசுமை துறைமுகம் அமைய தனியார்களிடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தனியார் ஒப்பந்தம் எடுக்க விரும்பினால் நாகையில் துறைமுகம் அமையும் என்று பதில் கூறினார். இந்த பதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதி மீது நம்பிக்கையை நாகை மாவட்ட மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. வணிகத்தில் கோலொச்சியிருந்து, தற்போது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கும் நாகை மாவட்டம் மீண்டும் பொருளாதார வளர்ச்சி பெற இழந்த பெருமைகளை மீட்டெடுக்க நாகை துறைமுகத்தை மேம்பாடு அடைய செய்ய வேண்டும் என்பது தான் நாகை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது.

இதுவரை தகவல்களாக மட்டுமே உள்ளது
ஜெயலலிதா அறிவிப்பை தொடர்ந்து நாகையில் கப்பலணை துறைமுகம் அமைக்க சென்னை ஐஐடி நிறுவனம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விரிவான கருத்துரு அளிக்கப்பட்டது. பின்னர் தனியார் முதலீட்டுடன் நாகையில் கப்பலணை பசுமை சூழ் துறைமுகம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால் அந்தத் தகவல்கள் எல்லாம் இதுவரை தகவல்களாக மட்டுமே உள்ளது.

செயல்வடிவம் பெறாத அறிவிப்பு
கடந்த 2011ம் ஆண்டில் 3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசும்போது, ரூ.380 கோடியில் அனைத்து பருவ நிலைகளிலும் இயங்க கூடிய பசுமை சூழ் துறைமுகமாக நாகை துறைமுகம் மேம்படுத்தப்படும் என அறிவித்தார். நாகை மக்களின் கோரிக்கைக்கு தீர்வு அளிக்கும் வகையில் வெளியான இந்த அறிவிப்பு நாகை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் இதுவரை அந்த அறிவிப்பு செயல்வடிவம் பெறவில்லை.

அரசு கூடுதல் செயலாளர் பதிலால் அதிர்ச்சி
நாகை துறைமுக மேம்பாடு குறித்து சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் அரசு கூடுதல் செயலாளர் அளித்துள்ள பதில் கடிதத்தில் நாகை மக்களின் துறைமுக கனவை சிதைக்க செய்வதாக உள்ளது. அதில், நாகை துறைமுகத்தில் சரக்குகளை கையாள தேவையான நிலப்பரப்பு இல்லாததாலும், நாகைக்கு அருகே உள்ள தனியார் துறைமுகம் இருப்பதால் நாகை துறைமுகத்தை மேம்படுத்த வாய்ப்புகள் குறைவு என அந்த பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : port city ,Naga ,Chola , Will Naga, which was a port city during the Chola rule, regain its glory? ... The long-held dream project of the dormant people
× RELATED ஒட்டக்கூத்தரும் தக்கயாகப் பரணியும்