×

பெண்ணுடன் பழகியதால் ஆத்திரம் வெறித்தன தாக்குதலில் மாணவர் சாவு: 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

புதுடெல்லி: டெல்லியில் தங்களது குடும்ப பெண்ணிடம் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் 18 வயது மாணவரை மிருகத்தனமாக தாக்கி கொலை  செய்ததாக, 3 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.டெல்லி ஜகாங்கீர்புரியைச் சேர்ந்தவர் ராகுல் (18). பிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். வீடுகளுக்கு சென்று டியூஷன் எடுத்தும் சம்பாதித்து வந்தார்.  அவருக்கு மேற்கு டெல்லி ஆதர்ஷ் நகரைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. அதை அறிந்த பெண்ணின் பெற்றோர், சகோதரர் உள்ளிட்ட  உறவினர்கள், நட்பை துண்டிக்கும்படி ராகுலுக்கு அறிவுறுத்தி உள்ளனர். எனினும் ராகுலுடன் பழகுவதை பெண் விரும்பி உள்ளார்.

இந்நிலையில், கடந்த செவ்வாயன்று, வீதியில் பெண்ணுடன் ராகுல் நடந்து சென்று கொண்டிருந்தார். டியூஷன் எடுக்கும் வீட்டில் இருந்து தன்னை  கூப்பிடுகிறார்கள் எனக் கருதிய ராகுல், சில அடிகள் திரும்பிச் சென்றார். அப்போது சுமார் 10 பேர் கொண்ட கும்பல் ராகுலை சூழந்து வெறித்தனமாக  தாக்கியது. நிலைகுலைந்த ராகுல், தப்பிக்கக் கருதியும், விடாமல் அவரை அமுக்கிப் பிடித்து மிருகத்தனமாக அடித்துள்ளனர். வீதியில் சென்ற பலரும்  காப்பாற்றக் கருதியும் அவர்களை அருகில் வராதபடி சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர். தகவல் கேள்விப்பட்டு அங்கு வந்த போலீசார் படுகாயமடைந்து  கிடந்த ராகுலை, மீட்டு, மருத்துவமனையில் சேர்ந்தனர். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் இறந்தார்.

இதனிடையே தாக்குதல் குறித்த மொத்த  விவரத்தையும் அப்பகுதி சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பார்த்து தெரிந்து கொண்ட போலீசார், தாக்குதல் நடத்தியதாக 3 சிறுவர்கள் உள்பட  பெண்ணின் உறவினர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர். தீவிர விசாரணைக்குப் பின் கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.  ஜாதிப் பிரச்னை காரணமாக ராகுல் தாக்கப்பட்டு இருக்கக்கூடும் என முதல் கட்ட விசாரணையில் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

10 லட்சம் நிவாரணம்
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று மாணவர் ராகுலின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ராகுலின்  குடும்பத்திற்கு அரசு நிவாரணமாக 10 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிசோடியா, ‘இந்த வழக்கில்  முக்கிய வழக்கறிஞர்களை நியமிப்பதன் மூலம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்யும்’ என்றார்.



Tags : Student ,rage attack ,boys , Anger at getting used to the girl Student killed in frantic attack: 5 arrested including 3 boys
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...