×

முழு அரசு மரியாதையுடன் பீகாரில் மத்திய அமைச்சர் பஸ்வான் உடல் தகனம்: இறுதிச்சடங்கில் மகன் மயங்கியதால் பரபரப்பு

பாட்னா: கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் உடல், முழு அரசு மரியாதையுடன் பீகாரில் நேற்று தகனம்  செய்யப்பட்டது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருந்தவர்  லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான். டெல்லி தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர்,  கடந்த வியாழக்கிழமை காலமானார். அவரது உடல் நேற்று முன்தினம் பாட்னாவிற்கு எடுத்து வரப்பட்டு, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் இறுதி  அஞ்சலி செலுத்துவதற்காக  வைக்கப்பட்டது.அதன் பிறகு அவரது இல்லம் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா புரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு  ஏராளமான மக்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பின்பு, அவரது உடல் திகாவில் உள்ள ஜனார்தன் காட் பகுதிக்கு கொண்டு  செல்லப்பட்டது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் இறுதி ஊர்வலம் நடந்தது. பஸ்வானின் மகனும்,  அரசியல் வாரிசுமான சிராக் பஸ்வான் தந்தையின் இறுதி சடங்குகளை நிறைவேற்றினார். அரசு முழு மரியாதையுடன் ராம்விலாஸ் பஸ்வானின் உடல்  தகனம் செய்யப்பட்டது. அவரது மனைவி ரீனா பஸ்வான் தொலைவில் இருந்து இதில் பங்கேற்றார். இறுதி சடங்குகளை நிறைவேற்றி கொண்டிருந்த  போது, சிராக் பஸ்வான் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பாரத ரத்னாவுக்கு பரிந்துரை
தாழ்த்தப்பட்ட தலைவரும் அனைவராலும் மிகவும் மதிக்கத்தக்கவராகவும் விளங்கிய ராம்விலாஸ் பஸ்வானுக்கு `பாரத ரத்னா’ விருது வழங்கப்பட  வேண்டும் என்று  பீகார் முன்னாள் முதல்வரும் இந்துஸ்தான் அவாம் மோர்சா தலைவருமான ஜிதன்  ராம் மன்ஜியும், பஸ்வானின் தம்பியும்  ஹஜிபூர் தொகுதி எம்பியுமான பசுபதி  குமார் பராஸ் ஆகியோர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Tags : Baswan ,Bihar , With full government respect Union Minister in Bihar Baswan's body cremated: Excitement over son's fainting at funeral
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...