×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனலில் நடால்-ஜோகோவிச் இன்று பலப்பரீட்சை

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் ஸ்பெயினின்  ரபேல் நடால், உலகின் முதல் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்  இன்று மோத உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பிரஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம்  டென்னிஸ் போட்டி இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.  ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்கில் நடைபெறும் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.முதல் அரையிறுதியில்  செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் (1வது ரேங்க்),  கிரீசின்  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (5வது ரேங்க்) மோதினர். முதல் 2  செட்களை 6-3, 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார்  ஜோகோவிச். ஆனால், அடுத்த 2 செட்களை 5-7, 4-6 என்ற கணக்கில் சிட்சிபாசிடம்  போராடி இழந்தார். அதனால் 5வது மற்றும் கடைசி செட் அதிக எதிர்பார்ப்புக்குள்ளானது. அந்த செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த   ஜோகோவிச் 6-1 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். சுமார் 3மணி 54 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 3-2 என்ற செட் கணக்கில் வென்ற  ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார்.

2வது அரையிறுதியில் அர்ஜென்டினாவின்  டீகோ ஷ்வார்ட்ஸ்மேன் (12வது ரேங்க்),  நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் ரபேல் நடால் (2வது ரேங்க்)  மோதினர். முதல் 2 செட்களை 6-3, 6-3 என்ற கணக்கில் அடுத்தடுத்து தன் வசப்படுத்தினார் நடால். 3வது செட்டில் டீகோ உறுதியுடன் போராடியதால்  டை பிரகேகர் வரை நீண்டது. டை பிரேக்கரில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி டீகோவை திணறடித்த நடால் 7-6 (7-0) என்ற கணக்கில்  கைப்பற்றினார். மொத்தம் 3 மணி 9 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியை 3-0 என்ற நேர் செட்களில் வென்ற நடால் பைனலுக்கு முன்னேறினார்.இறுதிப் போட்டியில்,   பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 12 முறை வென்ற நடாலும், ஒரு முறை வென்ற ஜோகோவிச்சும் இன்று மோதுகின்றனர்.

களிமண் தரை மன்னன்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடர் களிமண் தரை மைதானங்களில் நடைபெறுகிறது. இத்தகைய மைதானங்களில்  முடிசூடா மன்னனாகத் திகழும் நடால், பிரெஞ்ச் ஓபனில் 12 முறை சாம்பியன் பட்டத்தை வென்று மகத்தான சாதனை படைத்துள்ளார். 2005ல் முதல்  முறையாக இங்கு கோப்பையை முத்தமிட்ட அவர், தொடர்ந்து 2006, 2007, 2008 மற்றும் 2010, 2011, 2012, 2013, 2014ம் ஆண்டுகளில் சாம்பியன்  ஆனார். இப்போது தொடர்ந்து  2017, 2018, 2019ம் ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ள நடால் இப்போது 13வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல  களம் காண்கிறார்.பிரஞ்ச் ஓபனில் இதுவரை 4 முறை ஜோகோவிச் இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளார். அதில் 2016ம் ஆண்டு மட்டும்  இங்கிலாந்தின்  ஆண்டி மர்ரேவை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.மற்ற 3 பைனல்களில் 2 முறை நடாலிடமும், ஒரு முறை சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவிடமும் தோற்றுள்ளார். அதேநேரத்தில் இறுதிப் போட்டிக்கு  முன்னேறிய நடால் இதுவரை ஒருமுறை கூட தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Nadal-Djokovic ,tennis final ,French Open , French Open tennis Nadal-Djokovic in the final today
× RELATED பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் பைனலில் சபலெங்கா