×

மன்கடிங் செய்யாமலே பட்லரை வீழ்த்தினார் அஷ்வின்!

ஷார்ஜா: ஐபிஎல் போட்டியில் மன்கடிங் செய்யாமலே ராஜஸ்தான் வீரர்  ஜோஸ் பட்லரை  மீண்டும் வீழ்த்தி அசத்தினார் அஷ்வின். டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஷ்வின். கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது ராஜஸ்தானுக்கு எதிரான  போட்டி ஒன்றில் அந்த அணி வீரர்  ஜோஸ் பட்லரை  மன்கடிங் முறையில் ஆட்டமிழக்க செய்தார். ஐசிசி விதிகளை மீறி பந்து வீசுவதற்கு முன்பே  கிரீசை விட்டு ஓடத் தயாராகும் வீரர்களை இப்படி ஆட்டமிழக்க செய்யலாம். ஆனாலும் அது குறித்து  எதிராகவும், ஆதரவாகவும் விமர்சனங்கள்  எழுந்தன.தவறு செய்யும் பந்து வீச்சாளர்களுக்கு வைடு, நோ பால் என தண்டனை தருவது போல், ஆடாத முனையில் இருந்து அவசரப்பட்டு கிரீசை விட்டு  வெளியேறும் பேட்ஸ்மேன்களுக்கும் தண்டனை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அஷ்வின். இந்நிலையில் அக்.5ம் தேதி  பெங்களூருக்கு எதிரான போட்டியில், அந்த அணி வீரர் ஆரோன் பிஞ்ச்சை,  மன்கடிங் முறையில் அவுட் செய்யும் வாய்ப்பு இருந்தும் அஷ்வின்  அவ்வாறு செய்யவில்லை. ஆனால் ‘அடுத்த முறை இப்படி கண்டுக்கொள்ளாமல் இருக்க மாட்டேன். இதுவே முதலும் கடைசியுமான எச்சரிக்கை’ என  ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு களம் கண்டன. அதன் 2வது இன்னிங்சில் 3வது ஓவரை   அஷ்வின் வீசினார். திர்கொண்டவர்  ஜோஸ் பட்லர்.  அதனால் மீண்டும் மன்கடிங் நடக்குமா என்று எல்லோருக்கும் ஆர்வம். அந்த ஓவரின் முதல்  பந்தை எதிர்கொண்ட பட்லர் ஒரு ரன் எடுத்தார். அதனால் 2வது பந்துக்கு அவர் ஆடாத முனையில் நின்றார். ஆனால் கிரீசை விட்டு வெளியே  போகவில்லை. தொடர்ந்து 2வது பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு ரன் ஓடினார். அதனால் பட்லர் 3வது பந்தை எதிர்கொண்டார். அந்த பந்தை அவர்  லாங்  ஆன், மிட் விக்கெட்களுக்கு இடையில் தூக்கியடிக்க முயன்றார். ஆனால் பேட்டின் முனையில் பட்ட பந்து ஸ்கொயர் லெக்கில் இருந்த தவானிடம்  கேட்ச் ஆனது. அதனால் இந்த முறை மன்கடிங் செய்யாமலே  பட்லர் 13ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை  தேர்வு செய்ய, டெல்லி  20 ஓவரில் 8 விக்கெட்  இழப்புக்கு 184 ரன் எடுத்தது. ராஜஸ்தான்  19.4 ஓவரில் எல்லா  விக்கெட்டையும் இழந்து 138 ரன் மட்டுமே எடுத்து46 ரன்  வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியின்  திவாதியா 38, ஜெய்ஸ்வால்  34 ரன் எடுத்தனர். டெல்லி தரப்பில் ரபாடா 3, அஷ்வின், ஸ்டோய்னிஸ் தலா 2  விக்கெட் வீழ்த்தினர். 4 ஓவரில்  22  ரன் விட்டுக் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய அஷ்வின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டிக்கு பிறகு பேசிய அஷ்வின், ‘நான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நலமாக இருப்பது வெளிப்பட்டுள்ளது.   பவர் பிளேயின் போது ஓரிரு  முறை ‘கேரம் பால்’ வீசினேன்.  அப்படி எத்தனை முறை வீச வேண்டும் என்பது விளையாட்டை பொறுத்தது. எனக்கு ஒரு அற்புதமான கேட்ச்  கிடைத்தது. ஜோஸ் பட்லர் விக்கெட்டை கைப்பற்றுவது முக்கியமானது. பவர் பிளேவுக்கு பிறகு பனியால் பந்து ஈரமாக இருந்தது’ என்றார்.



Tags : Ashwin ,Butler , Without munching Ashwin knocks down Butler!
× RELATED சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3...